Powered By Blogger

19 டிசம்பர், 2019

சகோதரத்துவ மணம் வீசட்டும்


படம் : CAA - (Citizenship (Amendment) Act 2019) வை எதிர்த்து அமைதிப் போராட்டம் நடத்திட மக்கள் குழுமிய போது அங்கே கடமையாற்ற வந்திருந்த துப்பாக்கி ஏந்திய டெல்லி காவல்துறை காவலரை நோக்கி புன்னகையுடன் மலரை அன்பாய் பரிசளித்திட்ட ஒரு இசுலாமியச் சிறுமி!
                 

அன்புச் சகோதரனே!

நான் உன் மீது மலர்களைத் தூவுகிறேன்
கொஞ்சமாய் மனம் நெகிழ்
மெல்லியதாய்
ஒரு புன்னகை செய்

பிரம்பின் பிடியைக்
கொஞ்சம் தளரச் செய்
துப்பாக்கிகளைர் தூக்கி உறங்கப் போடு

கண்ணீர் குண்டுகளை அள்ளி தண்ணீரில் வீசு
நாங்கள் செய்வது தீவிரவாதம் அல்ல; ஜனநாயகம் 
எங்கள் குரல்கள் பீரங்கிகள் அல்ல;

இதயத்தின் அலறல்கள்
நாங்கள் மிருகங்கள் அல்லர்;

மனிதத்தின் உருவகங்கள்
நாம் தேசத்தைச் சிதைப்பவர்கள் அல்லர்;

எதிர்கால இ்ந்தியாவை விதைப்பவர்கள்
எங்கள் கைகளில் விலங்கிட்டு விடாதீர் ;

இந்தக் கைகள் தாம்
வல்லரசு இந்தியாவை வார்க்கப் போகின்றன
நீயும் கொஞ்சம் பூத்தூவி விட்டு போ
என் சகோதரா; நாடு முழுக்கவும்
சகோதரத்துவ மணம் வீசட்டும், 
இந்த மலர்களைப் போல்!

-பாகு

04 டிசம்பர், 2019

காடு வாழ்க

தொலைதூரப் பயணத்தின் இடையே 
ஒரு மரத்தின் நிழலில்
இளைப்பாறுகிறேன்

அந்த அடர்வனத்தின்
மணமிகுத்த காற்று 
என் முகத்தை
வருடி விட்டுப் போகின்றது

சலசலக்கும் ஓடை தரும் ஓசையின்
துள்ளொலிகள்
செவிகளுள் மெலிதாய் ஒலிக்கும் 
இசைச் சாரல்.

கனவுகளை துளிர்க்கச் செய்யும் 
பறவைகளின் சிறகொலிகள்

மலர்கள் என் கண்களை
தழுவிக் கொண்டன
காய்களும் கனிகளும்
அமுதமாய் தெரிந்தன

வெண்மேகங்களின் பரிவாரம்
வனத்தையே நீர்க்குடையாய்
போர்த்தி விட்டிருந்தது

இடையிடையே நிலவும்
அந்த...
அமைதியின் வரவு
மனதினுள் 
மவுனத்தை விதைத்துப் போயின

உள்ளம் 
என்னுள் படிந்திருந்த 
களைப்பையெல்லாம்
விழுங்கியிருந்தது 

இன்னும் சிறிது காலம்
இந்த காட்டிலேயே
இப்படியே
நான் கொஞ்சம்
வாழ்ந்து கொள்ளட்டுமா?