Powered By Blogger

14 டிசம்பர், 2022

டீ மாஸ்டரும் கடவுளரும்

அந்த தெரு முனை தேநீர்க் கடை…

தனித்துவமிக்க வகைவகையான தேநீருக்காகவும் பலகாரங்களுக்காகவும் எப்போதும் கூட்டம் அலைமோதும்

உரிமையாளரிடம் காசுகொடுத்து தேவையான தேநீருக்கென அடையாள வில்லை பெற்று வந்து அந்த ஆஜானுபாகு டீ மாஸ்டரிடம் நீட்டுவார்கள்

ஒவ்வொருவருக்கும் ஒரு தேர்வு இருக்கும்

ஒருவர் “நாட்டுச் சர்க்கரை டீ” என்பார்

இன்னொருவருக்கு “சர்க்கரை கம்மி”

நண்பர் கூட்டமொன்று “நான்கில் 1 மீடியம், 1 சர்க்கரை கம்மி, 2 ஸ்ட்ராங்”

நடைபயிற்சி முடித்து வந்த ஒரு முதியவர் ஒரு கையில் மசால் வடையை சுவைத்தபடி, “மாஸ்டர்… சர்க்கரை தூக்கலா…”

சைக்கிள் ஓட்டப் பயிற்சி முடித்து வந்த ஐந்து இளைஞர்களின் தேர்வு

“அண்ணே! ஒரு லெமன், ரெண்டு இஞ்சி டீ, 2 ஸ்ட்ராங்க்”

அடடே… மனிதர்களுள் இந்த தேநீரில் மட்டுமே எத்தனை விதவிதமான தேர்வுகள்

ஆனாலும் அந்த ஆஜானுபாகு டீ மாஸ்டர் அசரவேயில்லை

அவருக்கு வயது 45 லிருந்து 50 இருக்கலாம். கவனம் எதிரே நிற்பவரின் குரல்கள், தேநீர் குவளைகள், தேயிலை வடிநீர், கொதிக்கும் பால், குவளைகள் அத்தோடு எரியும் அந்த எரிவாயு அடுப்புகளின் சூடு ஏற்றி இறக்கும் குமிழ்கள்…

அவரின் இரு கைகளும், கைவிரல்களும், கண்களும் பரபரக்கும் காட்சி…

ஒரு இயந்திரத்தை விடவும் வலிமையானவராகவும், சிரத்தைமிக்கவராய்த் தென்பட்டார்.

பரபரப்பான தேநீர் கடைகளில் இம்மாதிரியான தொழிலாளர்களைப் பார்த்து நான் மிகவும் வியப்பதுண்டு

எப்படி இவர்கள் இப்பணியைப் பொறுமையாக செய்கிறார்கள்

வாடிக்கையாளர்களின் வெவ்வேறு விதமான தேர்வுகளை உள்வாங்கி கோப்பைகளை வரிசையாக்கி சீனி நாட்டுச் சர்க்கரை எலுமிச்சை சாறு இஞ்சிச் சாறு (சர்க்கரை அளவிலும் முழுசு/அரை/தூக்கல்(!) என வகைப்பாடுகள் வேறு) கொதிக்கும் நீரில் இருந்து தேயிலைச் சாற்றை ஒத்த அளவாய் கோப்பைகளில் இட்டு பால் கலக்கும் போது மீடியம் ஸ்ட்ராங்க் தேர்வுகளை மனதில் வைத்து

அப்பப்பா…

இதற்கிடையே முதலில் வந்த எனக்குத் தராமல் எனக்கு அப்புறம் வந்த அவருக்கு எப்படி தரலாம்?

அரை மணி நேரமாய் நிற்கிறேனே நான் சொல்வதை காதில் வாங்காமல் என்னய்யா டீ போடுகிறீர்கள்??

தப்பித்தவறி தேநீர் சுவை மாறினால் என்னையா டீ இது???

அடடா… !

அந்த ஆஜானுபாகு மனிதர் அசரவே இல்லையே

அதே புன்னகை அதே பரபரப்பு அதே வேகம் பணியில் சிரத்தை

அந்தச் சூழல் அவருக்கு ஒரு சிறை தான் போலும். நினைத்தாலும் சட்டென விட்டு விலகி வந்து ஒரு நிமிடம் கூட ஓய்வு கொள்ள இயலவில்லை

அது அவரது பிழைப்பு

ஆனாலும் அவர் என் கண்களுக்கு கடவுளராய்த் தெரிந்தார்

ஆம்…

கோயில்களில் கடவுளர் முன்னே இந்த மனிதர்களின் எத்தனை வகைவகையான கோரிக்கைகள்

என் பிள்ளை நல்லா வரணும்

என் பொண்ணு போற இடத்தில் சவுக்கியமா வாழனும்

என் அம்மா இன்னும் கொஞ்ச நாள் எங்கு கூட வாழனும்

எங்க வீட்டுக்காரர் குடிக்காம கொள்ளாம திருந்தி வாழும் சாமி

இந்த வருஷமாவது எனக்கு புரோமேஷன் வரனும்

… … … …

ஒருவேளை அந்தக் கற்சிலைகள் உண்மையில் கடவுளராய் இருக்குங்கால்,

அவரும் இந்த டீ மாஸ்டரை போல், தம்முன் கைகூப்பி நின்று வணங்கும் ஆயிரம், இலட்சம், கோடிக் கணக்கான பக்தர்களின் பலவகையான கோரிக்கைகளை எல்லாம் எங்ஙனம் உள் வாங்குவார், அருள் பாலிப்பார், யாரறிவர்?

பக்தன் கேட்டனவற்றை எத்தனை மணி எத்தனை நாள் எத்தனை வருடங்களில் வழங்கித் தன் கடமை தீர்ப்பாரோ? யாரறிவர்?

உண்மையில் கடவுளர்கள் வழங்குகிறார்களோ இல்லையோ, இதோ இங்கே இந்த டீ மாஸ்டர் ஒரு குரல் கோரிக்கையை கேட்ட மாத்திரத்தில், ஒரு சில நிமிடங்களில் கேட்டபடி வகைவகையிலான தேநீர் நம்  கைகளில்!

டீ மாஸ்டரே! நீர் கடவுளர் அய்யா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக