குற்றங்களுக்கு இலக்கா?
வாட்ஸ் அப்-பில் ஒரு ஒலிக்கோப்பு பரவிக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு காவல் துறை அதிகாரி வயர்லெஸ் கருவி வாயிலாக வாய் மொழி உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்.
அதில், ஒவ்வொரு காவல் நிலையத்திற்குமாக இன்னின்ன வகைகளுக்கு இத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கிறார்.
அதில் ஒன்று , முகக் கவசம் அணியாத வகையில் 100 பேர்.
மற்றொன்று, சமூக இடைவெளி கடை பிடிக்காதோர் 3 பேர்.
வேறு சில இனங்களுக்கும் சில எண்ணிக்கைகளை இலக்குகளாக நிர்ணயிக்கிறார்.
இது அநேகமாக, அவரது உயரதிகாரியால் நிர்ணயிக்கப்பட்டு, அவர் அதை தம் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களுக்கு நிர்ணயித்து தகவல் தெரிவிக்கிறார் போலும்.
தற்போதுள்ள கொரோனா பரவல் காரணமாக, அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி, வெளியே வரும் அனைவரும் சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும், ஒவ்வாருவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது தான்.
அது என்ன, 100 பேருக்கு அபராதம் விதிப்பதற்கான இலக்கு.?
சமூக இடைவெளி கடைபிடிக்காத இடங்களில் அது என்ன 3 பேருக்கு அபராதம்?
குற்றங்களை தடுக்க வேண்டும், குற்றவாளிகளை பிடிக்க வேண்டும், குற்றம் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், பாதுகாப்பு தர வேண்டும் என்பது தானே காவல்துறையின் தலையாய பணியாக இருக்க முடியும்?
இத்தனை எண்ணிக்கைக்கு குற்றங்களை கண்டு பிடிக்க வேண்டும் என்பது எப்படி இலக்காக முடியும்?
ஒருவேளை, ஒரு காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் பெரும்பாண்மை முகக் கவசத்தோடும், சமூக இடைவெளியை பின்பற்றியும் நடந்து கொண்டதாக இருந்து, 100 + 3 இலக்கை எட்டவில்லை என்றால், அதற்காக அந்த காவல் நிலைய அதிகாரிகளை மேலதிகாரிகள் கேள்வி கேட்பார்களா?
அதற்கு காவல் நிலைய அதிகாரிகள், இல்லை இல்லை, எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இத்தனை எண்ணிக்கை குற்றம் நிகழவில்லை என்று நியாயப்படுத்தினால் உயரதிகாரிகள் ஏற்பார்களா?
காவல் துறையினருக்கு கடமையும், சட்ட திட்டங்களுக்குட்பட்ட பணியும் தானே?
சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். குற்றங்கள் நடவாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதை மீறி குற்றங்கள் நடந்தால் அவற்றை பிடிக்க வேண்டும். குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். அவ்வளவு தானே?
ஆனால், இப்படி குற்றங்களுக்கு இலக்கு நிர்ணயித்தால், குறைவான குற்றங்களுள்ள பகுதியில் அந்த காவலர்கள் என்ன தான் செய்வார்கள், பாவம்?
மற்றைய துறையினருக்கு நல்லதுக்கு தான் இலக்குகள் இருக்கும்.
இத்தனை பேர்க்கு நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
இத்தனை மாணவர்களுக்கு இன்னின்ன வழங்க வேண்டும்.
இத்தனை மரம் நடவேண்டும்.
இத்தனை பேருக்கு வீடு கட்டித் தர வேண்டும். இத்தனை கழிவறைகள் கட்ட வேண்டும்.
சாலை போட இவ்வளவு ரூபாய் செலவிட வேண்டும்.
இப்படியானவை தானே இலக்கு?
ஆனால், காவல் துறையோ...
இத்தனை பிக் பாக்கெட் கேஸ் போட வேண்டும். இத்தனை திருட்டு கேஸ் பிடிக்க வேண்டும்.
இத்தனை செயின் அறுப்பு கேஸ் போட வேண்டும். இத்தனை சந்தேக கேஸ் போட வேண்டும்.
இத்தனை ஹெல்மெட் போடாதோர் அபராதம் போட வேண்டும்.
இத்தனை லைசன்ஸ் இல்லாதோர் அபராதம் போட வேண்டும்.
இப்போது, கொரோனா காலத்தில் 100 முகக்கவசம் இல்லாதோரை பிடிக்க வேண்டும்.
மூன்றே மூன்று சமூக இடைவெளி பின்பற்றாதோரை பிடிக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேல் குற்றம் நடந்தால் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமா?
நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு குற்றங்களைக் காண இயலவில்லை என்றால், யாரையாவது எவரையாவது பிடித்து பொய் வழக்கு போட்டுக் கொள்வதா?
அப்படித் தான் இருக்கிறது காவல் துறையின் சித்தாந்தம்.
கீழ்நிலையில் பணிபுரியும் காவலர்களுக்கு ஏற்கெனவே அதிகளவு பணிப் பளு மற்றும் நெருக்கடிகள் உள்ளன. இப்படி குற்றங்களுக்கு இலக்கு நிர்ணயித்து இலக்கு என்ற சொல்லின் சித்தாந்தத்தை சீர்குலைக்கிறார்கள்.
மக்களையும் வதைக்கிறார்கள்.
இலக்கு என்பது வளர்ச்சிக்கானதே அன்றி, மேலதிகாரியின் ரிவீவ்க்காக மேசையில் வைக்கப்படும் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுக்கானது அல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக