Powered By Blogger

25 மே, 2020

உழைக்கும் மகளிர்

ஸ்விக்கியிலிருந்து அலைபேசி அழைப்பு...
"சார் உங்கள் அலுவலகம் அருகில் வந்து விட்டேன்.
உங்கள் அறைக்கு எப்படி வரவேண்டும் சார்?"
---என்றது ஒரு பெண் குரல்.
எனக்கோ ஆச்சரியம்.

ஸ்விக்கி உணவு விநியோக நிறுவனத்தில் இப்போது பெண்களும் வருகிறார்களா?

ஆம். சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசலில், தாங்கவே முடியாத வெயிலில் ஆண்களுக்கே சவாலான இந்தப் பணியை மேற்கொண்டு, மோட்டார் சைக்கிள் ஓட்டிக் கொண்டு இந்த கடும் பணியை ஒரு பெண் புன்னகையோடு செய்கிறாரே.

இந்தப் பணிக்காக இந்தப் பெண் வலிகளை சுமந்து கொண்டு வருகிறாரே, இவர் ஏன் இந்த வேலையை தேர்ந்தெடுத்தார். என்னதான், அவரவர் வசதிப்படி நேரநிர்ணயம் செய்து கொண்டு தன்னிச்சையான தேர்வாக வேலையை செய்தாலும், இதில் ஆண்களைக் காட்டிலும் கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்குமே.

சாப்பாட்டை கையில் வாங்கியவுடன் என் மகள் வயதில் இருந்த அந்த பெண்ணை மனதார வாழ்த்தினேன். இவரின் கடும் உழைப்பிற்காகவே வாழ்க்கையில் சிறப்பான இடத்தை அடைய வேண்டும். விரைவில், நல்லதொரு வாழ்க்கைத் துணையுடன் மகிழ்வான வாழ்வை சுகித்திட வேண்டும்.

ஆனாலும், நான் அந்தப் பெண்ணின் வியர்வைத் துளித்திருந்த முகத்தினைக் கண்ட பின்னும் ஏ.சி. அறையில் வேலைக்கேற்ற ஊதியத்தை விடவும் கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டு ஒய்யாரமாய் சொகுசு வாழ்க்கை வாழும் என்னால் அந்த மதிய நேரத்து உணவை ருசித்துச் சுகித்து உண்ண முடியவில்லை.

ஆண்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பெண்கள் வந்து சாதிக்கிறார்கள் என்பது ஒருபுறம் மகிழ்ச்சி தரக் கூடியது தான். இருந்தாலும், இவர்கள் பெட்ரோல் பங்கில், லாரி ஆட்டோ ஓட்டுவது, மிகவும் உயரமான கட்டுமானப் பணிகளில் வேலை செய்வது, போன்ற பெண்களின் இயல்புநிலைக்கு மாறான சூழலை உருவாக்கக் கூடியதும், அவர்களின் வலிமைக்கு சவாலானதும், கொஞ்சம் இல்லை சில சமயங்களில் நிறையவே சங்கடங்களையும் தரக் கூடிய இம்மாதிரியான வேலைகளை அவர்கள் மிகவும் விரும்பி தேர்வு செய்து ஆண்களோடு போட்டியிடுகிறார்கள் என்றால் மிகையில்லை.

ஆண்களில் உழைக்காமல் வெறுமெனே சுற்றித் திரிந்து காலத்தையும் வாழ்க்கையையும் தொலைப்போர் மத்தியில் இந்த உழைக்கும் மகளிரை போற்றிடத் தான் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக