எலான் மஸ்க் கூறுவது என்னவோ உண்மைதான்.
பெரும்பான்மை உயர் பதவி வகிப்பவர்கள் தமக்கு கீழே, தாம் சொல்வதைக் கேட்டு அதை எதிர் கேள்வியின்றியும், மாற்று யோசனை இன்றியும் செயல்படுத்தித் தர ஒரு முட்டாள் இருந்தால் போதும் என்று நினைப்பார்கள்.
தாம் அவ்வாறு சொல்வது நியாயமானதா சட்டத்திற்குட்பட்டதா அவர் சொல்வதைக் காட்டிலும் நல்லதொரு யோசனையை தமக்குக் கீழே வேலை செய்பவர் வைத்திருப்பார் என்பதெல்லாம் குறித்து மேலதிகாரிகளுக்கு கவலை கிடையாது. சொல்வதைக் கேட்க ஒரு இலகுவான ஆள் தேவை, அவ்வளவே. அவர்களுக்கு இடப்பட்ட பெயர் முட்டாள்.
அவர்களுக்கு என்று ஒரு கோட்பாடு வைத்திருப்பார்கள்; நினைத்த மாத்திரத்தில் அதை எதிர்த்து கேள்வி கேட்காமல் செயல்படுத்த அவர்களுக்கு முட்டாள்கள் என்ற பெயரில் தேவைப்படும். உண்மையில் தலைமைப் பண்பு என்பது இங்ஙனம், சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு செய்கிற அடிமாட்டுக் கூட்டத்தை மேய்க்கின்ற விஷயம் கிடையாது.
இங்கே நம் அரசுத் துறைகளில் கூட நிறைய ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட மேலதிகாரிகள் தனக்கு கீழே இருப்பவர்கள், அவரை விடவும் நுண்ணறிவும் திறமையும் பெற்றவர்களாக இருக்கக் கூடாது என நினைப்பவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கின்றேன்.
ஒரு அலுவல் சார்ந்த காரணத்துக்காக அரசியல்வாதி ஒருவரை நான் எதிர்த்து பேசியதைத் தொடர்ந்து அவர் அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட, உடல் மனம் என எங்கும் சர்வாதிகாரத் தன்மை பொதிந்த அந்த மாவட்ட ஆட்சியர் என்னை ஆய்வுக் கூட்டத்தில் விஷயத்தை நேரடியாக விவாதிக்காமல் மறைமுகமாக பிரச்னையை மையமாக வைத்துக் கொண்டு என்னை சாடினார். அப்போது, சுதாரித்த நான், அரசியல்வாதியோடு ஏற்பட்ட மோதல் குறித்த பிரச்னையைத் தான் ஆட்சியர் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்டு கையில் வைத்திருந்த ஆதாரங்களை அவரிடம் காட்டி விளக்க முயன்ற போது அவரோ என் வாதங்களைக் காது கொடுத்து கேட்காமல், "போய் இருக்கையில் உட்கார்ந்து நான் சொல்வதை மட்டும் கேள்" என்றார்.
"நான் சொல்வதைக் கேட்கும் ஒரு முட்டாள் போதும் எனக்கு" ...
...எதிர்த்து கேள்வி கேட்கும் நேர்மையாளர் மீது அவ்வப்போது வந்து விழும் வார்த்தைகள் இவை...!
இப்படியான ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் பெரும்பாண்மையாக வைத்துக் கொண்டு இந்த நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் நாடு இந்த லட்சணத்தில் போய்க் கொண்டிருக்கிறது.
எலான் மஸ்கின் கூற்றும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது. ட்விட்டர் உருப்பட்ட மாதிரி தான்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக