Powered By Blogger

13 ஆகஸ்ட், 2020

நல்ல ஆசிரியர்

திருமிகு அ.த.பன்னீர்செல்வம் முன்னாள் ஆசிரியர்,
அரசினர் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை


தொலைக்காட்சியில் சாட்டை திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சமுத்திரக்கனி தன் வகுப்பில் ஆண்டு விழாப் போட்டிகளில் மாணவர்களை சேர்ந்திடச் சொல்லி வலியுறுத்துகிறார். தயங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி போட்டிகளில் சேர்த்து விடுகிறார். 
இந்தக் காட்சியைப் பார்க்கும் போது,  எனக்கு பழைய ஞாபகம் தான் வந்தது.

நான் பட்டுக்கோட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 1978-ல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அப்போதைய வகுப்பாசிரியர் பள்ளி இலக்கிய மன்ற விழாவில் பேச்சுப்போட்டிக்கு மாணவர் பெயர் கேட்கிறார்.

ஒருவரும் ஆர்வம் காட்டி பெயர் தருவதற்கு எழுந்திடவில்லை.
சுந்தரம் என்ற மாணவர் சுமாரகப் படிப்பான். அவனுக்கு மனதில் ஆசை. 
தயங்கிக் கொண்டே தன் ஆர்வத்தை தெரிவிக்கிறான். 
ஆனால் அவனுக்கு உள்ளுக்குள் பயம். தன்னால், மேடையில் நின்று மைக் முன்பாகவும், அத்தனை பேர் முன்பாக பேச இயலுமா என்ற ஐயம் இருந்திருக்கலாம்.  அதற்கு முன்பாக, இம்மாதிரி மேடையில் பேசியதுமில்லை.

வகுப்பாசிரியர் அவனைத் தேற்றுகிறார்.
தலைப்பைச் சொல்லி அது குறித்து என்னவெல்லாம் தெரியுமோ அவற்றை கோர்வையாக வாக்கியமத்தை  முடிந்த விதத்தில் எழுதிவரச் சொல்கிறார்.
அவனும் அடுத்த இரண்டெரு நாளில் கட்டுரையாக எழுதிக் கொண்டு வருகிறான். 

ஆசிரியர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, அக்கட்டுரை குறித்து சில திருத்தங்களையும் ஆலோசனைகளையும் சொல்லி கட்டுரையை செம்மைப்படுத்தச் செய்து, அவனை வகுப்பில் எங்கள் முன்பாக பேச வைக்கிறார்.

பெரிதாக ஒன்றுமில்லை,
"உரக்கப் பேசு,
தேவையான இடத்தில் ஏற்ற இறக்கமுடன் பேசு எனச் சொல்லி அதனையும் பேசிக் காண்பித்தார். 
தமிழ் உச்சரிப்பை சரியாகச் செய், அதற்காக தினமும் விடாமல் பயிற்சி செய். 
கடைசிப் பத்தியில் தலைப்புக்கான கருத்தை அழுத்தமாக வலியுறுத்து..
பரிசு முக்கியமில்லை...
மேடையேறி பேசிவிட்டு வா.... அது போதும் !" 
இவ்வளவு தான் வகுப்பாசிரியர் அவனுக்குச் சொன்ன அறிவுரைகள்.

நான்கைந்து முறை வகுப்பு மாணவர்கள் முன்னிலையில் அவனைப் பேசச் சொல்லி சின்னச் சின்னத் திருத்தங்களை செய்தார். அவ்வளவு தான்.
பள்ளிஇலக்கிய மன்ற மேடையில் சுந்தரம் பேசினான். 

வகுப்பில் மறைவாய் அமர்ந்து யாருக்கும் பெரிதாய் தெரியாத அவன், மேடையில் பள்ளின் மாணவர்கள் யாவர் முன்பாகவும் பிரகாசமாய்த் தெரிந்தான்.
 
அதிகமாகப் பேசிப் பார்த்திடாத சுந்தரம் மேடையின் மீது அலையோசையாய் ஆர்ப்பரித்தான்.

என்ன ஆச்சரியம், பேச்சுப் போட்டியில் அவனுக்குத் தான் பள்ளியிலேயே முதல் பரிசு !

ஆனால், எங்கள் வகுப்பாசிரியர் அந்த பரிசுக்கான தகுதிக்கு சுந்தரமே இலக்கானவன் என்று அவனை பாராட்டி விட்டு ஒதுங்கி நின்றார்.
இப்போது நினைத்தாலும் நெகிழ்ச்சியில் உடல் சிலிர்க்கிறேன்.

அதன் பிறகு சுந்தரம் பள்ளியில் குறிப்பிடத்தக்க பேச்சாளரான மாணவனாகத் திகழ்ந்தான். அந்த பெருமை எங்கள் ஆசிரியரையேச் சாரும் என்று நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு; சுந்தரமும் தான்.

இப்படியும் வகுப்பாசிரியரால் இயங்கிடல் இயலும் என்று அப்போதே எங்களுக்கு உணர்த்தியவர் அப்போதைய எங்கள் வகுப்பாசிரியர், 
நாங்கள் மரியாதையுடன் ஏடிபி (ATP) சார் என்றழைக்கும்
திரு.A.T. பன்னீர் செல்வம் அவர்கள்.

ம்ம்ம்... இப்போதெல்லாம் ஏடிபி.க்களை சினிமாவில் தான் பார்த்துக் கொள்ள இயலுமா?

இப்போதெல்லாம் ATP-மாதிரியான ஆசிரியர்கள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கிறார்களா?

இப்போதைய இளம் தலைமுறையினர் தான் சொல்ல வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக