
எண்ணெய் ஆட்டும் செக்குகளையெல்லாம் இனி வரும் சந்ததியினர் பார்க்க வாய்ப்பு கிட்டுமா என்பது சந்தேகமே...
ஐந்தாறு வருடங்களுக்கு பிறகு, என் இல்லாளுடன் எண்ணெய் அரவை மில்லில் (செக்கு) தேங்காய் அரைக்க வந்து இருந்தேன். முன்பொரு காலத்தில் வீட்டில் இருக்கும் 2, 3 தென்னை மரங்களில் கிடைக்கும் தேங்காய்களை கொண்டு ஒரு வருடத்திற்கான எங்கள் தேவைக்கான தேங்காய்எண்ணெய் ஆட்டி எடுத்து வைத்துக்கொள்வது கொள்வது வழக்கம்.
அதே போல் கடையில் எள் வாங்கி நல்லெண்ணெய் ஆட்டி ஒரு வருடத்திற்கு வைத்துக் கொண்டதும் உண்டு.
பணி நிமித்தமாக சென்னைக்கு போனபிறகு இதெல்லாம் இயலாமல் போனது. பொதுவாக, மனிதனுக்கு எண்ணெய் நுகர்வென்பது மிகவும் முக்கியமான வாழ்க்கை முறையாகிவிட்டது. எங்கள் வீட்டில் எண்ணெய் உபயோகத்தை மிகவும் கவனத்துடன் செய்வதுண்டு. தாளிதம் வறுவல் பொரியல் என்று எண்ணெய் தொடர்புடைய சமையல்கள் அனைத்திலும் வழக்கத்திற்கும் குறைவாகவே பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தாள் என் இல்லாள்.
இப்போதெல்லாம் பெரிய கம்பெனிகள் கார்ப்பரேட்டுகள் வகைவகையாய் எண்ணெய்களை வியாபாரத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
எது உடலுக்கு நல்லது எது தீங்கானது இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாமா கூடாதா என்றெல்லாம் குழம்பியபடியே விவாதத்தில் மூழ்கிப் போய்க் கொண்டிருக்கிறது காலம். பொதுவாக, நம் இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்துவதில் எண்ணெய் பொருள்களுக்கு பங்குண்டு என்ற விழிப்புணர்வு மட்டும் நமக்கு வந்துவிட்டது என்னவோ உண்மை.
ஆனால், எண்ணெய் குறித்த பயமும் புரிதலற்ற போக்கும் இங்கே நம்மை குழப்பி கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு எண்ணொய் தயாரிப்பு நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நம்மை பீதி
அடைய செய்து வைத்திருக்கிறார்கள்...
யாரை நம்புவது யாரை புறக்கணிப்பது என்பதில் கூட நமக்குள் நம்பகத் தன்மை இல்லை என்பதே உண்மை. பெரும் வியாபார உலகம் என்று ஆகிவிட்ட நிலையில் கிடைக்கின்ற கண்ட கண்ட எண்ணெய் வகைகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம்.
சென்னை போன்ற பரபரப்பு மிகுந்த நகரங்களில் மக்கள் விளம்பர உத்திகளால் கவரப்பட்டு அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதுபோக கண்ட கண்ட எண்ணைய்களில் உணவு தயார் செய்யும் ஹோட்டல்களில்
உணவு வாங்கி சாப்பிட்டு காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.
சமீபகாலமாக மரச்செக்கு மரச்செக்கு என்று சொல்லிக்கொண்டு ஒரு வியாபாரம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
சென்னையில், நானும் கவனித்தேன் அந்த மரச்செக்குகளில் பகல் நேரத்தில் எண்ணெய் ஆட்டுவதை ஒருமுறை கூட கண்ணால் பார்க்காத நிலையில் பாட்டில் பாட்டிலாக செக்கு எண்ணெய் செக்கு எண்ணெய் என்று சொல்லி விற்றுக் கொண்டிருப்பதை கண்ணுற்றேன்.
இது என்ன மாயமோ மர்மமோ என்றுதான் சந்தேகிக்கத் தோன்றுகிறது...
மக்கள் எல்லோரும் எல்லோரும் உறங்கிய பின் அர்த்த ராத்திரியில், இந்த மரச் செக்குகளில் எண்ணெய் ஆட்டுகிறார்கள் போலும். ஊரகப் பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இப்படியான ஆயில் மில்கள் (செக்குகள்) இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகளும் இன்னும் எத்தனை காலம் இயங்குவதற்கு கார்ப்பரேட்டுகளின் பெரிய எண்ணெய் நிறுவன முதலைகளும் அனுமதிக்குமோ தெரியவில்லை. மனித உடலின் செரிமான மண்டலத்திற்கும் இதயத்தின் ரத்தக் குழாய்களுக்கும் ஆகாத எண்ணெய்களால் இதய நோய்களும் வயிற்று பிரச்சினைகளும் வர, இன்னொரு பக்கம் யார் யாரோ பண மூட்டை கட்டிக்கொண்டு பயனடைந்து போகிறார்கள்.
ஆனால், விழிப்பு இல்லாத இந்த பொதுஜனம் மாய வலையில் விழுந்து நாளுக்கு நாள் உடல்நலத்தையும் பணத்தையும் இழந்து கொண்டே போகிறார்கள்.!!
எண்ணெய் விஷயத்தில் தினசரி கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.


