திருக்குறளை ஆழ்ந்து படிக்கும் வாய்ப்பு என் அகவை அறுபதைத் தொடும் இத்தருணத்தில் தான் எனக்கு முழுமையாக அமையப்பெற்றது.
பள்ளிப் பருவ காலத்தில் 'அகர முதல' எனத் தொடங்கி மனப்பாடச் செய்யுளாக சொற்ப எண்ணிக்கையிலான குறள்களைப் படித்ததோடு சரி. மனதினுள் குறள் பொதிந்த அளவிற்கு அதன் பொருள் பதிந்திடாத நிலையோடு கடந்த காலம் அது. இளம் வயதில் ஒரு கட்டத்திற்கு மேல், பல திசைகளில் இருந்தும் திருக்குறள் சார்ந்த ஆக்கங்கள் நம்மைக் கடந்து பயணித்ததை மறக்கவியலாது.
அந்நாளில், எங்கிருந்தாவது குறளோ அல்லது குறள் சார்ந்த படைப்போ நம் புலன்களைத் தழுவாது இருந்ததில்லை எனலாம்.
திருக்குறள் எனும் ஈரடிச் செய்யுள் இவ்வுலகின் எல்லா அக மற்றும் புறவெளிகளிலும் செலுத்திய ஆளுமை, தமிழனின் பெருமைக்குச் சான்றாக விளங்குகின்றது.
திருக்குறள், சங்க இலக்கியத்தில் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்கள் திரட்டிற்குட்பட்ட குறள் வெண்பா வகையினாலான 133 அதிகாரங்களாகவும், ஒவ்வொரு அதிகாரமும் 10 செய்யுட் பாக்கள் வீதம், ஆக 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டதாகும். திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்று பால் பகுப்புகளாக அமையப்பெற்றுள்ளது. திருக்குறள் மானுடவியலின் அறநெறிகளை நீக்கமற வலியுறுத்தியும் வாழ்க்கை வழிகாட்டுதல்களையும் பகுத்து சொல்லப்பட்ட மிகவும் தொன்மையான பெருமை மிகும் படைப்பாகும்.
இந்நூல், பொதுத் தன்மையோடும் மதச்சார்பற்றதுமான தன்மையுடையதாகக் கருதப்படுவதே இதன் சிறப்பம்சமாகும். இத்தகு சிறப்புடைய குணநலன்களால் தான் திருக்குறள் உலகில் பொது மொழியான ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு இன்று வரையிலும் உலகெங்கிலும் புகழ் பெற்ற ஒரே நூலாகத் திகழ்ந்து வருகின்றது.
உலகமே போற்றும் திருக்குறளை தமிழராகப் பிறந்திருந்தும், இளம் வயதில் ஐயமறக் கற்காததால் நாம் இழந்தவை குறித்து மனம் வருந்துவதை மறுக்க இயலாது.
சரி, போகட்டும்; இப்போதாவது அதை முழுமையாகக் கற்கவும் ஆராய்ந்தறியவும் வாய்ப்பு கிட்டியது குறித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.
திருக்குறளுக்காக உரை எழுதிய அறிஞர் பெருமக்கள், திருக்குறள் சார்ந்து ஆய்வுகளை மேற்கொண்ட பேரறிஞர்கள், திருக்குறளை மையமாக வைத்து பல்கலைப் படைப்புகளை உலகுக்குத் தந்த பெருமை மிகும் படைப்பாளர்கள், இசை வடிவம் தந்த கலைஞர்கள், பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து உலகெங்கிலும் திருக்குறள் பெருமையை பறை சாற்றிய உலகளாவிய பெருமக்கள் அனைவரையும் வியந்து நோக்குகிறேன்; அளவிடற்கரிய சாதனைகளுக்காக அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.
முதன்முதலில் ஒரு குறளை எப்போது படித்தோம் என்பது நினைவில் இல்லை. ஒவ்வொரு குறளும் எங்ஙனம் நம் நினைவில் அகலாது ஒட்டிக் கொண்டு நம்மோடே வாழ்கிறது என்பதை ஆராய்ந்தறியவே இயலாததென்பது வியப்புக்குரியது.
ஒவ்வொரு குறளுமே மனிதகுலத்திற்கான வாழ்வு நெறிமுறைகளையும் வகுத்துத் தந்திருக்கிறது. மனித சமுதாயத்தின் அங்கங்களான இல்வாழ்க்கை, அரசியல், பொதுவாழ்வு என எல்லாவற்றையும் நெறிப்படுத்தும் வகையில் பாங்காய் அமைந்திருப்பதைப் பார்க்கும் போது, அதை இயற்றி அளித்துள்ள திருவள்ளுவர் எத்தகைய மாண்புமிக்க மனித வடிவம் என்பதை உணரலாம்.
திருக்குறளின் சாரத்தை முற்றாக பிறழ்வின்றி கடைபிடிக்கும் ஒருவரால் இந்த உலகை வெல்ல இயலும் எனில் மிகையில்லை. அத்தகைய ஒருவர் காணக்கிடைத்தல் அரிது என்பதும் வியப்பில்லை. ஏனெனில், நாம் சமுதாய ஒழுங்கு, கலாச்சாரம், பண்பாடு, அரசியல் நேர்மை ஆகியவற்றுள் ஒருவித எதிர்மறை வலைக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். அதனின்று நம்மை விடுவித்துக் கொள்ள இயலா தொலைவில் பயணிக்கிறோம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆயினும், இந்த குறள்கள் தினந்தோறும் நம்மை அழைத்துக் கொண்டு தானிருக்கிறது.
நன்னெறியைப் புகட்டவும், நேரிய வாழ்வு கொள்ளவும், நீதி பிறழாத மனத்தோடு ஆட்சி வழங்கவும், தலைசிறந்த இல்வாழ்க்கையை சிரமேற்கவும் குறள்கள் நம் அருகிலேயே நிலைநின்று குரல் கொடுத்தவாறே நம்மை ஓயாது அழைத்துக் கொண்டிருக்கிறது.
திருவள்ளுவர் வகுத்துத் தந்த பாதையினூடே பயணித்தல் என்பதே நம் இலட்சியத்தை ஈடேற்றும் உன்னத வழியென்றால் அது மிகையில்லை.
வாழ்க திருவள்ளுவர்! வளர்க திருக்குறள் புகழ்!!
புகழ் வளரும்…✍

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக