ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதலே ஏழரை மணிக்கு முன்பாக எழுவதேயில்லை என்று ஆழ்மனத்திற்கு சத்தியம் செய்து கட்டளையிட்டாயிற்று.
போன ஞாயிறு அன்று காலை 8 மணியிருக்கும். பல்துலக்கி விட்டு நியூஸ் கேட்கலாம் என்று லாப்டாப்பை தட்டினேன். வழக்கம் போல் என் இல்லத்தரசி இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் தூள், இத்தியாதிகள் போட்டு தந்த கஷாயத்தை சுவைத்துக் கொண்டே பீலா மேடம் பேட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சாலையில் க்ரீச்... என்று கார் வந்து நின்ற சப்தம். என் வீடு முதல் தளத்தில். வீட்டின் ஹாலில் நின்று பார்த்தால், சாலை தெரியும். சன்னல் வழியே பார்த்தால், டவேரா காரில் இருந்து ஸ்டெதாஸ்கோப்புடன் ஒருவர் இறங்கினார். டாக்டரே தான். பின் இருக்கையிலிருந்து ஒரு பெண், ஊதா நிற சீருடையில் இளவயது நர்ஸ். கூடவே மோட்டார் பைக்குகளில் இரண்டு மூன்று இளைஞர்கள். அவர்கள் கழுத்தில் அடையாள அட்டைகளை போட்டிருந்தனர். அவர்கள் மாநகராட்சி ஊழியர்களாக இருக்க வேண்டும்.
கார் நின்ற வேகத்தில் பரபரப்பானார்கள். எங்கள் குடியிருப்பினுள் அங்கும் இங்குமாய் ஓடினார்கள். எங்கள் செக்யூரிட்டி பேசுவது சன்னமாய் கேட்கிறது.
நான் கொஞ்ச நேரத்திலேயே பதற்றமாகிவிட்டேன்.
என் மனைவியை அழைத்துச் சொன்னேன். இதோ பார், டாக்டர் குழு நமது குடியிருப்பிற்கு வந்துள்ளது, ஏதோ கொரோனா தொற்று ரிப்போர்ட் ஆகியுள்ளது போலும்.
நெஞ்செல்லாம் இடி இடித்தது. கற்பனை எங்கோவெல்லாம் செல்லத் துவங்கியது.
மனைவியிடன் சொல்லத் துடிக்கிறேன். இந்த பகுதியை தனிமைப்படுத்தி விடுவார்கள். வெளியே எங்கும் செல்ல இயலாது.
தினம் தினம் முழு பயத்தோடு வாழ்க்கை. அவசரமாக ஒரு பொருள் வாங்கிட வேண்டுமானால் கூட மிகவும் சிரமத்திற்குள்ளாக நேரிடும்.
அலுவலகத்திற்கு தகவல் சொல்ல வேண்டுமே.
முக்கியமான கோப்புகள் என் வசம் மாட்டிக் கொண்டு விட்டனவே, அவற்றை எப்படி என் மேலதிகாரியிடத்தில் ஒப்படைப்பது?
சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு கீழே போய் விசாரிக்க ஆயத்தமானேன். அந்த நர்ஸ் அதற்கு யார் வீட்டிற்குள்ளோ போய் விட்டு, திரும்ப கார் அருகே வந்திருந்தார். டாக்டர், அந்த ஊழியர்களுக்கு அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்து வேறு வீட்டை எண்ணை சொல்லி எங்கள் செக்யூரிட்டியிடம் விசாரிப்பதை புரிந்து கொண்டேன்.
விடுவிடுவென கீழே இறங்கினேன். முதலில் செக்யூரிட்டியிடம் விசாரித்தேன்.
அவர் சொன்னார், இங்கே பக்கத்து அப்பார்ட்மெண்டில் ஒரு அம்மையாருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருமலாம். தினசரி வீடுவீடாக வரும் சுகாதாரப் பணியாளர் ஒருவர் ரிப்போர்ட் செய்து விட்டார். அதனால், மருத்துவ பரிசோதனை செய்ய வந்தார்களாம் என்றார்.
வேறொரு முகவரி சொல்கிறார்களே என்றேன்.
அது, நம் பிளாட் இல்லை சார்… அது பக்கத்து தெரு என்றார்.
கொஞ்சம் நிம்மதி வந்தது.
டாக்டரிடம் என்னவென்று கேட்கலாம் என கேட்டைத் திறப்பதற்குள் காரில் ஏறி பறந்து விட்டார்.
எங்கள் ஏரியாவுக்குள் கொரோனா பரிசோதிக்கும் மருத்துவர் குழு வந்ததற்கே இந்த படப்படப்பு என்றால்,
கொரோனா வந்தால்…?????
அப்புரம் ஆற அமர தெளிவாக ஒரு முடிவுக்கு வந்தேன்.
எது வந்தாலும், எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்.
வருமென்று எதிர்பார்த்திருக்க வேண்டாம்.
வந்தாலும், வரட்டும் பார்க்கலாம், மோதி விடலாம்.
தன்னம்பிக்கை தானே எல்லாவற்றுக்கும் மருந்து?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக