"இலக்கு என்பது தோற்பினும், தொலைவைக் கடந்து முடித்தல் என்பது வீரனுக்கு அழகு"
"ஓட்டப்பந்தயத்தில் முதன்மையாக வந்து வெற்றி பெறாவிடினும் ஓடுதளத்தின் முழு தொலைவையையும் ஓடி முடித்தல் தோல்வியிலும், இலக்கை நிறைவு செய்தலாகும்"
இந்தப் பாடத்தை எம் பள்ளி எனக்கு சொல்லித் தந்ததொரு சம்பவம்.
1980-களில் நான் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த சமயம். பள்ளி ஆண்டு விழாவுக்காக விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
அப்போது, எனக்குள் ஒரு ஆசை; ஒரு போட்டியிலாவது கலந்து கொண்டு ஒரு கோப்பையாவது வென்றிட வேண்டும் என்பது...
100 மீட்டர் ஓட்டப்பந்தயம்; நான் முதலாவதாக கலந்து கொண்டது.
என் சிறுவயதில் நான் வேகமாக ஓடும் திறம் கொண்டவன் என்ற மனப்பாங்கு எப்படியோ என்னுள் இருந்து வந்திருக்கிறது. நெருங்கும் பேருந்தை ஓடிப்போய் பிடிப்பது, துரத்தும் நாயிடம் தப்பித்து ஓடுவது, தோசை ஊற்ற அம்மா அவசரமாய் எண்ணெய் வாங்கிவரச் சொன்னதும் ஒரே ஓட்டமாய் ஓடிச் சென்று வாங்கி வந்தது, சினிமாவுக்கு நேரத்தில் போக வேண்டி ஓடிச் சென்று டிக்கெட் வாங்கியது... இப்படியாக என்னுள் நிறைய ஓட்டத்திறமைகள் இருந்தமையை நான் ஓட்டப்பந்தய வீரனாக மனதினுள் வடித்து வைத்திருந்த கற்பனையில் ஓட்டப் பந்தயமும் என் இலக்கில் ஒன்றாயானது.
என் வகுப்பு நண்பன் ராஜசேகர், பள்ளி தடகள விளையாட்டுப் போட்டிகளின் வெற்றியாளன் என்கிற அளவிற்கு திறமையாளன் என்பது உணராமல் அவனோடு நானும் களத்தில் ஓடினேன்.
ஓடினேன் ஓடினேன் ஓடி முடித்தேன்.
அதற்குள் ராஜசேகர் சிட்டாய் பறந்து முதல் இடத்தைப் பெற்றிருந்தான்.
அடுத்து சில நிமிடங்களில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம். அதிலும் ராஜசேகரும் ஓடுகிறான்.
அந்த மைதானத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஓடுதடத்தில் சுமாராக 3 முறை சுற்றி முடிக்க வேண்டும் என்பதாக ஞாபகம். ஆரம்பத்தில் நிதானமாக ஓடிக்கொண்டிருந்தான் ராஜசேகர். நானும் அவனை அனுசரித்தே பதட்டமின்றி ஓடிக் கொண்டிருந்தேன்.
இரண்டாவது சுற்றில் ஓடிக் கொண்டிருக்கும் தருணம் ராஜசேகர் கொஞ்சம் வேகம் எடுத்தான்...
அவ்வளவு தான் தெரியும், நான் 2வது சுற்று ஓடி முடிக்கும் முன்பே அவன் என்னை ஓவர் டேக் செய்து 3வது சுற்றுக்குள் வந்து விட்டான்; இன்னும் சில ஓட்டப்பந்தய வீரர்களும் விரைந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
துணையாக ஒன்று இரண்டு பேர் மெல்லமாய் ஓடுகிறார்கள். எனக்கு பின்னால் கூட ஒரு நண்பன் வந்து கொண்டிருந்தான்.
அந்தப் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஒலிபெருக்கியில் எங்கள் பெயர்களை சொல்லி சொல்லி ஓர் அறிவிப்பை உரக்கச் சொன்னார்.
அதாவது, எங்கள் இருவர் பெயரையும் குறிப்பிட்டு, ஒரு ஓட்டப்பந்தயத்தில் ஓரிருவர் ஏன் மூவர் கூட வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். எல்லோருமாய் அந்த ஒரு பந்தயத்தில் வெற்றி பெற வாய்ப்பில்லை. ஆனால், பந்தயத்தில், ஓடிக் கொண்டிருக்கும் அனைவரும் களத்தில் இலக்காய் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை ஓடி முடிப்பது தான் அழகு என்று சொன்னார்.
என் மனதில் திக் திக் என்றது.
ராஜசேகர் ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்து முதலிடத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டும் விட்டது. நானும் என் சகாவும் மெல்லமாய் நாக்குத் தள்ள 3வது ரவுண்டை அடி அடியாய் எடுத்து வைத்து கடக்கின்றோம். கிட்டத்தட்ட எல்லோருமே ஓடி முடித்து அடுத்த விளையாட்டுப் போட்டித்திடலுக்கு போன பின்பும் நாங்கள் தனியாக ஓடிக் கொண்டிருந்தோம்.
எப்படியோ 800 மீட்டர் ஓட்டத்தை நிறைவு செய்தேன்.
ஆனாலும், உடற்பயிற்சி ஆசிரியரின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து விளையாட்டுப் போட்டியின் சத்தியமான ஒழுங்கை காப்பாற்றிக் கொண்டேன் என்பதில் இன்றளவும் எனக்கு மகிழ்ச்சியே!
நண்பன் ராஜசேகரன் அந்த ஆண்டு 100 மீட்டர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், ஹை ஜம்ப், லாங் ஜம்ப் என் பல போட்டிகளில் வென்று சாம்பியனாகி இருந்தது கூடுதல் மகிழ்ச்சி!
"தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படி" என்று மனதிற்குள் நான் முழங்கிக் கொண்டாலும் அதன் பிறகு எந்த விளையாட்டுப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல்!
நண்பன் ராஜசேகர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக