Powered By Blogger

05 ஜூன், 2023

அரசியல் பேசுவோம்

காலையில் எழுந்தவுடன் குழாயில் தண்ணீர் வரவில்லை. காலைக் கடன்களுக்காக கால் பக்கெட் தண்ணீர் கூட இல்லை.

சரி, சிறிது நேரம் காத்திருக்கலாம் என முகத்தைக் கழுவி விட்டு முகநூலில் சமூகப் பொங்கல்களை ஆற்றலாம் என்று திறந்தால், "விநாயகர் சிலை அகற்றம்", "ஒடிசா ரயில் விபத்து ஒரு சதி" என ஒரேயடியாய் காவிக் கசடுகள் கண்ணைக் கட்டின.

இடையிடையே சேலத்து ஆணவக் கொலை நாயகன் குறித்த அரற்றுதல்கள். அவரை குறிப்பிட்ட சமூகத்தின் ஏகோபித்த காவலராக (மாவீரனாம்: அடேய்!) சித்தரித்து, அவர் மீண்டும் சாமுராய் கணக்காய் வெளியே வந்து சா'தீய' சமூகப் பணி ஆற்றுவார் என ஒரு சாரார் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர்.
நீதிமன்றத்தில் தீர்ப்புரை வாசிக்கப்பட்ட போதே அவருடைய சா'தீய' வெறி சரிந்து விழுந்து விட்டது என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை போலும்.

இப்போதெல்லாம் சமூகத்துக்காக பொங்கி முகநூல் வருகிறவர்களில் சாதிக்காகவும் மதத்திற்காகவும் கம்பு சுத்துகிறவர்களே அதிகமாகத் தெரிகிறார்கள்.

சாராயக்கடை துயரத்தைப் பற்றி எழுதினால் இவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்; மதச்சார்பு வெறுப்பு அரசியல் பற்றி எழுதினால் அவர்கள் கோபித்துக் கொள்கிறார்கள்.

பொதுக்குழு அரசியல் நடத்தி பிழைப்பு நடத்துபவர்களை பற்றிப் பேசினால் அந்த ஆட்கள் என் பொடனியில் அடிக்க வருகிறார்கள்.

பாருங்கள் நடுநிலையானளராக இருப்பதில் எத்தனை கொடுமை என்று, எந்த பக்கம் திரும்பினாலும் குத்து விழுகிறது.

பொதுவாக, அரசியல்வாதிகளை வெறுக்க வைத்தது நான் வேலை பார்த்த துறை தான்; அலுவலகத்துள் வந்த நிமிடத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் வரை கறை வேட்டிகளோடு கட்டிப் புரண்டு விட்டு வீட்டுக்கு வந்து தூங்கினால், தூக்கத்தில் அதிகாரிகள் கனவில் வந்து அவர்களும் போதாக்குறைக்கு அரசியல் துவேஷம் செய்வது நினைவிலாடியது.

கம்யூனிச சித்தாந்தம் கொஞ்சம் பிடிக்கும் என்றாலும், இங்கே கம்யூனிஸ்டுகளை பிடிப்பதில்லை (நல்லகண்ணு அய்யா உள்ளிட்ட ஒரு சிலரைத் தவிர)

என்னை போன்ற நடுநிலையாளர்கள் வேறு என்னதான் செய்வது?

சாதியையும் மதத்தையும் வைத்துக்கொண்டு நாட்டை பாழாக்குபவர்களிடம் விலகிச் செல்வதா? இல்லை, அவர்களிடத்தே போராடிப் பார்த்து விடுவதா?

பலரும் இங்கே, தன் சாதியை உயர்த்திப் பிடித்து தாமே உயர்ந்தவர் என்றும், பிற மதத்தவரை இழிவு செய்வதன் மூலம் நாட்டின் இறையாண்மையை நிலைநிறுத்துவதாகவும் போலியான சித்தாந்தத்தை வகுத்து வைத்திருக்கின்றனர்.

இதனால், பிரிவினைவாதமும் வெறுப்பு அரசியலுமே ஓங்கி நிற்கிறது.

அதன் விளைவாக எல்லா சமூகமும் நிம்மதியற்றுக் கிடப்பதோடு நாட்டின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என்ற அறிவே இல்லாதவர்களாகத் திகழ்கின்றனர்.

அவர்களுக்கு தம் கருத்தில் நியாயம் தர்மம் இருக்கிறதா இது சமூகவெளியில் அறம் சார்ந்த விளைவுகளை பதிப்பிக்குமா என்பது குறித்தெல்லாம் துளியும் கவலை கிடையாது.

இவர்களுக்கு மத்தியில் யாரையும் தொந்தரவு செய்யாமல் கவிதை இலக்கியம் கலைகள் பெண்கள் குழந்தைகள் கல்வி சுய முன்னேற்றம் சமூக வளர்ச்சி என நேர்மறை பதிவுகளை எழுதி தாம் உண்டு தம் வேலை உண்டு என தன் போக்கில் பயணிப்பவர்கள் மிகக் குறைவே.

அவர்களுமே தப்பித் தவறி அறம் தவறிய சாதிய வெறி மதத் துவேஷம் குறித்து பதிவுகளை எப்போதாவது நேர்மையான வகையில் இட்டால், அவைகளும் மார்க்கின் அறமில்லா அல்காரிதச் சித்தாந்தத்தால் அநியாயமாக கீழே தள்ளப்பட்டு விடுகின்றன.

(இந்தக் கட்டுரையில் கூட நான் community standard -ஐ மீறிய வகையில் எத்தனை வார்த்தைகளை எனக்குத் தெரியாமலே போட்டு இருப்பேன் என்று தெரியாது.)

அடுத்தவர்களின் அழுக்கை விமர்சிக்க வருபவர்கள் அவர்கள் மீது ஒட்டி இருக்கும் அழுக்கைப் பற்றி கவலை கொள்வதில்லை.
அது என்னவோ அவர்களின் தார்மீக உரிமை என்று அழிச்சாட்டியமாய் நின்றாடுகிறார்கள்.

என்னை ஒரு நண்பர் கேட்டார் நீங்கள் இடதா? வலதா? என்று!

நான் சொன்னேன், நான் இடதும் இல்லை வலதும் இல்லை; நடு சென்டர் (!?) என்றேன்.

ஆம். நான் ஒரே அடியாய் வலது பக்கமோ இடது பக்கமும் சாய்பவன் அல்லன். வலதின் அடையாளம் கொண்டவர் அறத்தோடு திகழ்வாறானில் அவரை பாராட்டத் தவறுவதில்லை.

அதேபோல் இடது என தம்மை விளித்துக் கொண்டு களவு செய்வாரானால் அவரைக் கண்டிக்கவும் தயங்குவதில்லை.

அதனால்தான், சொன்னேன் நான் வலதும் இல்லை இடதுமில்லை, நடுவாளன் என்று!

இங்கே சமூக ஊடகங்களில் இது போன்ற நடுநிலை சிந்தை கொண்டவர்கள் நிறைய பேர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் வலது ஆசாமிகளாலும் இடது ஆசாமிகளாலும் மத்தளம் போல் நாளுக்கு நாள் அடிபட்டேக் கிடக்கிறார்கள்.

குறைந்தபட்சம் கருத்து சொல்பவனை வார்த்தைத் தாக்குதலை கொண்டு வீழ்த்த நினைப்பது அறம் கிடையாது.

அவன் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் இருந்தால் நாகரீகமாக எழுத்து வடிவில் முன் வைக்க வேண்டும். அது இயலாது என்றால் திரும்பிப் பார்க்காமல் ஓடிப் போய் விட வேண்டும்.

நாம் அன்றாடம் புழங்கும் ஒரு சொல் - "பொது ஜனம்".

இந்தப் பொது ஜனம் என்பது நடுநிலையாளரைத் தவிர வேறு எவரும் இல்லை.

இவர்கள்தான் இடதாயினும் வலதாயினும் தவறுகளை தயக்கமின்றி சுட்டிக் காட்டுபவர்கள்.

இவர்கள் தான் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் காரணிகளை உருவாக்குகிறார்கள்.

இவர்கள் தான் நாட்டின் இறையாண்மையை அறத்தோடு காக்க முயற்சிப்பவர்கள்.

நடுநிலையாளர்களை புண்படுத்தாமல் ஒதுங்கிப் போய் விடுங்கள்.

அவர்கள் அமைதியானவர்கள் தான்; ஒரு கட்டத்திற்கு மேல் அந்த அமைதியும் தன் கட்டுடைத்து சீற்றம் கொண்டுவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக