Powered By Blogger

28 ஆகஸ்ட், 2020

உயிரும் கல்லீரலும்


மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும்! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.

அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !

மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.

இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும். இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.

கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு. இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம். இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.

அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான். மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. 

கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.

கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது. கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல்.

அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.

கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !
இத்தகைய கல்லீரலை காப்பாற்ற

~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.

~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

~ அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.

~உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும். நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

~முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.~

நம் உயிர் காக்கும் கல்லீரலைக் காப்போம்! 
நலமாய் வாழ்வோம்!!

13 ஆகஸ்ட், 2020

நல்ல ஆசிரியர்

திருமிகு அ.த.பன்னீர்செல்வம் முன்னாள் ஆசிரியர்,
அரசினர் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை


தொலைக்காட்சியில் சாட்டை திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சமுத்திரக்கனி தன் வகுப்பில் ஆண்டு விழாப் போட்டிகளில் மாணவர்களை சேர்ந்திடச் சொல்லி வலியுறுத்துகிறார். தயங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி போட்டிகளில் சேர்த்து விடுகிறார். 
இந்தக் காட்சியைப் பார்க்கும் போது,  எனக்கு பழைய ஞாபகம் தான் வந்தது.

நான் பட்டுக்கோட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 1978-ல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அப்போதைய வகுப்பாசிரியர் பள்ளி இலக்கிய மன்ற விழாவில் பேச்சுப்போட்டிக்கு மாணவர் பெயர் கேட்கிறார்.

ஒருவரும் ஆர்வம் காட்டி பெயர் தருவதற்கு எழுந்திடவில்லை.
சுந்தரம் என்ற மாணவர் சுமாரகப் படிப்பான். அவனுக்கு மனதில் ஆசை. 
தயங்கிக் கொண்டே தன் ஆர்வத்தை தெரிவிக்கிறான். 
ஆனால் அவனுக்கு உள்ளுக்குள் பயம். தன்னால், மேடையில் நின்று மைக் முன்பாகவும், அத்தனை பேர் முன்பாக பேச இயலுமா என்ற ஐயம் இருந்திருக்கலாம்.  அதற்கு முன்பாக, இம்மாதிரி மேடையில் பேசியதுமில்லை.

வகுப்பாசிரியர் அவனைத் தேற்றுகிறார்.
தலைப்பைச் சொல்லி அது குறித்து என்னவெல்லாம் தெரியுமோ அவற்றை கோர்வையாக வாக்கியமத்தை  முடிந்த விதத்தில் எழுதிவரச் சொல்கிறார்.
அவனும் அடுத்த இரண்டெரு நாளில் கட்டுரையாக எழுதிக் கொண்டு வருகிறான். 

ஆசிரியர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, அக்கட்டுரை குறித்து சில திருத்தங்களையும் ஆலோசனைகளையும் சொல்லி கட்டுரையை செம்மைப்படுத்தச் செய்து, அவனை வகுப்பில் எங்கள் முன்பாக பேச வைக்கிறார்.

பெரிதாக ஒன்றுமில்லை,
"உரக்கப் பேசு,
தேவையான இடத்தில் ஏற்ற இறக்கமுடன் பேசு எனச் சொல்லி அதனையும் பேசிக் காண்பித்தார். 
தமிழ் உச்சரிப்பை சரியாகச் செய், அதற்காக தினமும் விடாமல் பயிற்சி செய். 
கடைசிப் பத்தியில் தலைப்புக்கான கருத்தை அழுத்தமாக வலியுறுத்து..
பரிசு முக்கியமில்லை...
மேடையேறி பேசிவிட்டு வா.... அது போதும் !" 
இவ்வளவு தான் வகுப்பாசிரியர் அவனுக்குச் சொன்ன அறிவுரைகள்.

நான்கைந்து முறை வகுப்பு மாணவர்கள் முன்னிலையில் அவனைப் பேசச் சொல்லி சின்னச் சின்னத் திருத்தங்களை செய்தார். அவ்வளவு தான்.
பள்ளிஇலக்கிய மன்ற மேடையில் சுந்தரம் பேசினான். 

வகுப்பில் மறைவாய் அமர்ந்து யாருக்கும் பெரிதாய் தெரியாத அவன், மேடையில் பள்ளின் மாணவர்கள் யாவர் முன்பாகவும் பிரகாசமாய்த் தெரிந்தான்.
 
அதிகமாகப் பேசிப் பார்த்திடாத சுந்தரம் மேடையின் மீது அலையோசையாய் ஆர்ப்பரித்தான்.

என்ன ஆச்சரியம், பேச்சுப் போட்டியில் அவனுக்குத் தான் பள்ளியிலேயே முதல் பரிசு !

ஆனால், எங்கள் வகுப்பாசிரியர் அந்த பரிசுக்கான தகுதிக்கு சுந்தரமே இலக்கானவன் என்று அவனை பாராட்டி விட்டு ஒதுங்கி நின்றார்.
இப்போது நினைத்தாலும் நெகிழ்ச்சியில் உடல் சிலிர்க்கிறேன்.

அதன் பிறகு சுந்தரம் பள்ளியில் குறிப்பிடத்தக்க பேச்சாளரான மாணவனாகத் திகழ்ந்தான். அந்த பெருமை எங்கள் ஆசிரியரையேச் சாரும் என்று நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு; சுந்தரமும் தான்.

இப்படியும் வகுப்பாசிரியரால் இயங்கிடல் இயலும் என்று அப்போதே எங்களுக்கு உணர்த்தியவர் அப்போதைய எங்கள் வகுப்பாசிரியர், 
நாங்கள் மரியாதையுடன் ஏடிபி (ATP) சார் என்றழைக்கும்
திரு.A.T. பன்னீர் செல்வம் அவர்கள்.

ம்ம்ம்... இப்போதெல்லாம் ஏடிபி.க்களை சினிமாவில் தான் பார்த்துக் கொள்ள இயலுமா?

இப்போதெல்லாம் ATP-மாதிரியான ஆசிரியர்கள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கிறார்களா?

இப்போதைய இளம் தலைமுறையினர் தான் சொல்ல வேண்டும்.