நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றியும் தஞ்சை அரசு மருத்துவமனை பற்றியும் பேசியதன் விளைவாக சமூக வலைத் தளங்களில் கடும் விவாதங்கள் நடந்து, ஆதரவும் எதிர்ப்புமாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்தப் பதிவு அவர் பேசியது சரியா? தவறா என்பது பற்றியது அல்ல. அதைப் பற்றி நிறைய விவாதப் பொருளையும் இங்கே நான் பகிரவில்லை.
நான் சொல்ல வருவது வேறு செய்தி.
இந்த நேரத்தில் எனக்கு தஞ்சை இராசா மிராசுதார் மருத்துவமனை பற்றிய நினைவலைகள் வந்து போயின.
1990 ஆம் ஆண்டு. அப்போது தஞ்சாவூரில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.
அந்த சமயம் என் மனைவிக்கு பிரசவக்காலம்.
அதற்கு முந்தைய குழந்தை ஒன்று சிசேரியன் மூலம் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது இறந்துவிட்ட நிலையில் சீக்கிரமே அடுத்த குழந்தை.
எங்கள் இருவருக்குமே கொஞ்சம் பயம். இந்த முறையும் சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இல்லை என்றும், சிசேரியன் தான் ஒரே வழி என்ற நிலையில் பதட்டமான சூழ்நிலையில் என் நண்பர்கள் சிலர், "பேசாமல் அரசு மருத்துவமனைக்கு போய் விடு, அங்கே இப்போது நல்ல மருத்துவர்கள்இருக்கிறார்கள். பணத்தையும் அதிகம் இழக்கத் தேவையிருக்காது" என்றார்கள்.
பிரசவ காலம் நெருங்கியது. அப்போது டாக்டர்.ஜெகன்மோகினி என்ற சீனியர் ஒருவர் தான் பிரசவப்பிரிவின் தலைமை மருத்துவர்.
அவரை நம்பி அங்கே போனோம்.
என் நண்பர்கள் பலரும், " நீ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவதால், அலுவலகம் மூலம் சிபாரிசுடன் போய் பார்" என்றார்கள். ஆனால், இதற்கெல்லாம் சிபாரிசை விரும்பாத நான், நேரடியாக போய் அட்மிஷன் போட்டு விட்டேன்.
அப்போது பணியிலிருந்த டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, 15 நாட்கள் தொடர் கவனிப்பில் இருக்க வேண்டுமென்று தங்க வைத்து விட்டார்கள்.
தினசரி, நான் என் மனைவிக்கு சாப்பாடு கொடுத்திட போக வர இருந்தேன். பல நேரங்களில் நானும் சில சமயங்களில் அங்கேயே போய் மனைவியோடு சேர்ந்து சாப்பிடுவேன்.
அருகே, பெரிய கோவில் வாயிலை ஒட்டிய வாசலுக்கு அருகில் முனியாண்டவர் கோவில் நிழலில் சிறிது நேரம் பொழுது போகும்.
அப்போது, அந்த மகளிர் குழந்தைகள் நலப் பிரிவில் டாக்டர்.ஜெகன்மோகினி அவர்கள் தலைமை மருத்துவர். அவர் கண்டிப்பான மருத்துவர் என்பதைத் தாண்டி, நிர்வாகத்தில் மிகவும் சிரத்தையானவர். மருத்துவமனை வளாகமே நன்கு சுத்தமாக இருக்கும். கண்டபடிக்கு கண்ட நேரத்தில் பார்வையாளர்கள் உள்ளே வரக் கூடாது போன்ற கெடுபிடிகளும் உண்டு. ஆனால் சிகிச்சை சிறப்பாக இருப்பதாக மக்களிடையே நம்பிக்கை இருந்த வந்தது.
மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்தும் பிரசவத்திற்காக மக்கள் வருவார்கள். சிறப்பான மருத்துவத்தை சிலாகித்து பேசுவார்கள்.
ஆபரேஷன் தேதி குறிக்கப்பட்டது.
முதல் நாளே, என் அதிகாரியை பார்த்து விடுப்பு விண்ணப்பம் தர போனேன். அவர் சொன்னார், "நான் சிபாரிசு கடிதம் தருகிறேன். அதை டாக்டர்.ஜெகன்மோகினி அவர்களிடம் கொண்டு போய் கொடு. சிறப்பாக கவனிப்பார்கள்" என்றார். நானோ, " வேண்டாம் சார். பொதுவாகவே நன்றாக பார்க்கிறார்கள். தேவையென்றால், உங்கள் உதவியை நாடுகிறேன்" என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.
அந்த அதிகாரி என் மீது தனிப்பிரியமும் நன்மதிப்பும் கொண்டிருந்தமையால், ஆபரேஷன் அன்று அலுலகத்தில் முக்கிய பணியாளர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தார். எனக்குத் தெரியாமலே மருத்துவமனைக்குள் சென்று டாக்டரை சந்தித்து விஷயத்தை சொல்லியுள்ளார்கள்.
அவரோ, அதற்கு நான் ஒன்றும் அரசாங்க அலுவலக ஊழியர் மனைவி என்றால் ஒரு மாதிரியும், சாதாரண தொழிலாளி வீட்டு பெண்மணி என்றால் ஒருமாதிரி வைத்தியம் பார்ப்பவர் அல்ல, நீங்கள் போகலாம். என்று கூறிவிட்டார்.
அடுத்த அரை மணிநேரத்தில் என் இரண்டாவது மகன் பிறந்தான். பிரசவத்திற்கு பிறகு 1 வாரம். நல்ல தொடர் கவனிப்பு. நல்ல மருந்து மாத்திரைகள் என்று எந்த குறையும் இல்லை என்றே சொல்லலாம்.
அதன் பிறகு 6 வருடங்கள் கழித்து என் அம்மாவுக்கு அதே அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை ஆபரேஷன். அப்போது, டாக்டர் கோமதி அவர்கள். அத்தனை சிறப்பான மருத்துவம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால்....
மருத்துவனைகள் அந்த காலத்தில் மருத்துவர்களின் கட்டுப்பாட்டிலும், சிறப்பான கவனிப்பிலுமாக அந்த மருத்துவமனைக்கே ஒட்டுமொத்த நல்ல பேர் கிடைத்து. HOD-க்கள் சிறப்பாக இருந்தால், அந்த பிரிவு துறையில் சிறப்பான மருத்துவம் கிடைக்கும். Dean-நல்ல நிர்வாகியாக இருந்தால், ஒட்டு மொத்த மருத்துவ மனையே சிறப்பானதாக இருக்கும்.
நிர்வாகம் செய்யக்கூடியவர் மனசாட்சிப்படி, நேர்மையாகவும், சிறப்பாகவும் செயல்பட்டாலே போதும் அதன் பயனை மக்கள் அனுபவிப்பர்.
அப்போது, இதை சுட்டிக்காட்ட ஒரு செலிபிரட்டியோ, ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியரோ தேவையில்லை என்பதைத் தான் வலியுறுத்துகிறேன்.
இன்றளவும் அந்த இரு மருத்துவர்களை நான் நன்றியோடு நினைத்துப் பார்ப்பதுண்டு.
இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.
ஜோதிகா அவர்கள் சொன்னதிலும் தவறேதுமில்லை.
இப்போது பெருத்துக் கிடக்கும் மக்கள் தொகையில், ஏழை எளிய மக்கள் அதிகம் பேர் அரசு மருத்துவமனைகளைத் தான் நாடி வருகின்றனர்.
அதில் கார்ப்பரேட் மாஃபியாக்களால் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனைகளின் அடாவடியை தாங்க முடியாமல் அவர்கள் நாடிவரும் அரசாங்க மருத்துவமனைகளை நன்கு பராமரிப்பதோடு நல்ல மருத்துவத்தையும் தர வேண்டும் தானே?
மதம் சார்ந்த வழிபாட்டுத் தளங்களை விடவும் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை நன்கு செலவு செய்து சிறப்புடன் பராமரிக்க வேண்டும் கேட்பது நல்ல சமூக நலன் நிறைந்த கோரிக்கையே.

