Powered By Blogger

18 பிப்ரவரி, 2023

இவன் ராத்திரி




மெய் மறந்து ஆடுகிறேன்!
பரவசத் திளைப்பில்
என் பாதம் பணிந்த கூட்டத்தாரோடு
பயணிக்கும்
இவன் ராத்திரி!

அன்பேயான ராசனின்
மௌனப் பார்வையின் கண்முன்னே
எந்தன் ஆனந்த நடனம்

முழு இரவையும் விழுங்கி
சனத்திரளின் உள்ளத்துள் தீயை மூட்டி
அகண்ட மேடை நெடுகிலும்
பொங்கியெழும்
பரவசப் பிரவாகத்தைக் காணீர்!

இதோ
முதல் வரிசையில்
மேல்தட்டு டிக்கெட் வாங்கி வந்த
பணத் திமிங்கிலங்கள்
ஆனந்தத் திளைப்பில் மகிழ்ந்திருக்க...

அதோ
கட்டக் கடைசி வரிசையில்
வெள்ளை உடுத்தி
நீள் சிவப்புப் பொட்டிட்ட
என் பக்த மங்கைகள்
மொட்டைத் தலையாட்டி ரசித்திருக்க...

எல்லோரையும்
எந்தன் குதூகலச் சிரிப்பால்
அதிர வைத்து ஆடுகிறேன்

லட்சோப லட்சம் பன்னிறைக் கோடியாய்
என் பக்தாள்களின் பரவசத்தில்
திளைத்து ஆடுகிறேன்
ஆடித் திளைக்கிறேன்

திரைதனில் மேனி காட்டி மினுமினுக்கும்
பேரறிவு மங்கைகளை
கிள்ளி நகையாடிக் களிக்கிறேன்

வெள்ளைத் தோலும்
விரிந்த கண்ணுமாய்
மெல்லிடை நெளித்தாடும்
வண்ணக் கனவின் மங்கையவள் உள்ளம் சிலிர்க்க
பறந்தாடுகிறேன்

தன் வீடொழித்து
என் சிறைப்பறவைகளான
பக்தப் பதுமைகள் மட்டும்
இன்றொரு நாள்
சிரித்திருக்க
சிலிர்த்திருக்க
என் சிம்மாசனம் விட்டிறங்கி
வீதி நடம் புரிகின்றேன்

கோடிக் கண்கள்
உலகங்கும் எமை உற்று நோக்க
தொலைக் காட்சி வழியே
பக்திப் பாசறைத் திறக்கிறேன்

வனங்களை வளங்களைக்
காக்கவென்று
கொங்கு மலைச்சாரல் நின்று
நித்தம் தவம் செய்தும்
இனம் காக்கவென்று கூவியும்
கும்மாளமிட்டுக் களிக்கிறேன்

எனை அறிவு ஜீவியென
நம்பும் கூட்டம் பலவிற்கும்
தீட்சையளித்து
கோடிகளில் மிதந்து
கூத்தாடிக் குதிக்கிறேன்

எந்தன் கொத்தளத்தில்
நானே இறைவனின் மைந்தன்
நானே வனங்காக்கும் வடிவினன்
நானே யுகக் காவலன்
நானே மகா மகா குருவாவேன்

என் முன்னே
மூத்த முதல் குடியும்
பிரதமத் திலகங்களும்
வந்திங்கு பரவசந்தனில் திளைப்பர்,
பொய்யில்லை...

அடுத்தாண்டும்
இவன் ராத்திரி வரும்,
உலகாளும் மன்னவரும்
என்னோடு இசைந்தாடும்
பரவசம் கொள்வதைக் காண்பீர்!
ஆண்டுக்கு ஆண்டு
என் அவதாரம் பெருகிடல் காண்பீர்!