Powered By Blogger

19 டிசம்பர், 2020

மனிதமே மதம்




என் அம்மாவுக்கு பிரசவமாகி,
தம்பி பிறந்து ஆஸ்பத்திரியில் இருந்த சமயம்,
என் உடம்பெல்லாம்
அம்மை நோய் வந்து
அநாதையாய்
வீட்டில் வீழ்ந்து கிடந்தப் போதில்,
பக்கத்து வீட்டு
மாரியாத்தா பக்தைகள் எல்லாம்
அச்சம் கொண்டு அலறிப் புடைத்தோட...


என்னை வாரியணைத்துத்
தொட்டுத் தூக்கி
தன் வீட்டில் கிடத்தி
உடலெங்கும் வேப்பிலைப் பூசி
மஞ்சள் நீர் கொண்டு குளியாட்டி
இன்னும் எல்லாவித
இந்து முறைமைகளையும்
ஒன்று விடாமல் செய்து
என் உயிர் காத்தவள்...
என் இரண்டாம் வகுப்பு
பள்ளித் தோழியான
ஸ்டெல்லா பிரிஜ்ஜிட்டாவின்
அம்மா அற்புத மேரி!

அம்மை என்பது
மரியம்மை பக்தைகட்கு மட்டும் சும்மா தானோ!
மாரியம்மாவுக்கு மட்டும் மல்லுக்கு நிற்குமோ என்ன?

மதமாவது மண்ணாங்கட்டியாவது
போங்கடா !!

மனிதமே மதம் வேறன்றி நானறியேன்!

15 அக்டோபர், 2020

யாருக்கும் வெட்கமில்லை


வருடா வருடம் இந்த தீபாவளி வந்து தொலைக்கிறது, வெட்கமேயில்லாமல்.
ஆம், இந்த மாதிரி தரங்கெட்ட சாலையில் மக்கள் கூடுவார்கள், ஜவுளி எடுக்க மக்கள்
இந்த தி.நகர் ரெங்கநாதன் சாலையில் கும்பல் கும்பலாய் நடப்பார்கள்.
இதை அறிந்தும் வருடந்தோறும் வந்து தொலையும் தீபாவளிக்கு வெட்கமில்லை.
மழைக்கும் வெட்கமில்லை.
வருடந்தோறும் இப்படியான சாலையில் பெய்து விட்டு போகிறோமே, இதை எந்த நாதாரியும் ஏறிட்டுப் பார்த்து சீர் செய்யப் போவதில்லை. இங்கே வந்து பெய்து தெலைக்கிறோமே என்று மழைக்கும் வெட்கமில்லை.
மக்களுக்கும் வெட்கமில்லை.
நாமும் ஒரு விடுமுறை நாள் விடாமல் கடைத்தெரு சுற்ற வந்து விடுகிறோம். பல வருடங்களாக இந்த சாலை இப்படித்தான்
சேறும் சகதியுமாய்
குண்டும் குழியுமாய்
கேவலமாய் கிடக்கின்றதே, கொஞ்சம் அடங்கித் தான்
வீட்டில் கிடப்போமே என்றில்லை. இல்லை, இந்த அவலத்தை தட்டிக் கேட்டு சரி செய்ய முயல்வோம் என்பதுமில்லை. ஆக, மக்களுக்கும் வெட்கமில்லை.
வணிகர்களுக்கும் வெட்கமில்லை.
மழை பெய்யும் போதெல்லாம், இப்படி இந்த சாலை நாறிப் போகிறதே. இதை சரி செய்ய ஏதாவது செய்து தொலைப்போம். மக்கள் ஏதோ ஒரு நாள் வருகிறார்கள். நாம் தானே இங்கே நிரந்தரவாசிகள்.
இந்த சாலையில் வணிகம் செய்யும்.அனைவரும் ஒன்று சேர்ந்தால் இதை சரி செய்வது ஒன்றும் இயலாத காரியமில்லை.
ஆனாலும் ஆண்டாண்டாய் இச்சாலையை கேவலமாய் வைத்து தம் வியாபார லாபத்தை மட்டும் பார்க்கும் இவர்களும் வெட்கமில்லாதவர்கள் தானே.?
மாநகராட்சிக்கும் வெட்கமில்லை.
இத்தனை இலட்சம் மக்கள் வந்து போகிற இடமாச்சே. இதை நாம் தானே சரி செய்ய வேண்டும்.
இது நம் கடமை தானே?
நம்மைத் தானே மக்கள் காறித் துப்புவார்கள் என்று இந்த மாநகராட்சி அலுவலர்களுக்கும் துளியும் வெட்கமில்லை.
(அடச்சை... இதுக்கு பேரு
The Greater Chennai Corporation..வேறு!)
அரசியல்வாதிக்கும் வெட்கமில்லை...
அய்யே... அவர்களுக்கு ஆதியிலிருந்தே ஏன், கிருஷ்ண பரமாத்மா காலத்திலிருந்தே வெட்கம் என்பது அறவே இல்லையே.
ஆக, யாருக்கும் வெட்கமில்லை.



குழந்தையாதல் வேண்டும்




ஆழ்கடலின்
அமைதியில்
உறங்கியெழுந்து
கரையோர அலைகளில்
நுரைப் பூக்களாய் தவழ்ந்து
செவி துளைக்கும்
காற்றின் மணம்
நுகர்ந்து மிதந்து
வண்ண மணல் பரப்பினில்
முகம் புதைத்து
சின்னஞ்சிறு
வளை நண்டுகளோடு
ஓடி ஒளிந்துக் கொட்டமடித்து
துறு துறு எண்ணங்களை
நீலவான் பரப்பினில்
சிதறடித்து
... ஒரு துள்ளல்
வாழ்க்கை வாழ்ந்து மகிழ...
-- இக்கணமே
ஒரு குழந்தையாதல் வேண்டும்!

23 செப்டம்பர், 2020

அரசியல் பரிட்சை

~மதவாதம்
~இனவாதம்
~சாதிய பிரிவினைகள்
~ஊழல் சாம்ராஜ்யங்கள்
~தலைவிரித்தாடும் இலஞ்சப் பேய்கள்
~மணல் மாஃபியாக்கள்
~மருத்துவ மாஃபியாக்கள்
~கல்விக் கொலைகாரர்கள்
~கலாச்சார வன்மங்கள்
~அதிகாரிகளின் உழப்பல் குழப்பல்கள்
~சமூக விரோதிகள்
~வேலையில்லா திண்டாட்டம்
~சுகாதாரச் சீர்கேடுகள்
~தண்ணீர் கொள்கை மீதான எதிர்வினைகள்
~மத்திய அரசின் பாரபட்சங்கள்
~அரசு எந்திரந்தினுள்ளேயே எத்தனிக்கும் சாதிப் பிரிவினைகள்
~மீடியாக்களின் முரண்கள்
~தொட்டதற்கெல்லாம் பழி சுமத்தும் பிறகட்சிகள்
~நெஞ்சில் குத்தும் விரோதிகள்
~முதுகில் குத்தும் துரோகிகள்
~கூட இருந்தே குழி பறிக்கும் உங்கள் தோழமைகள்
.... இதையெல்லாம் தாங்கியும்
கடந்தும் வென்றும் மீண்டெழுந்தும் தன்மை மாறாமல் நிலைத்திருப்பீரா...
மிஸ்டர்.கமல்ஹாசன்!
ஆம் எனில்,
உங்கள் மையம் இங்கே மையங்கொள்ளும்...

28 ஆகஸ்ட், 2020

உயிரும் கல்லீரலும்


மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும்! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.

அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல் !

மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.

இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு 'ப்ரோத்ரோம்பின்' என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும். அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும். இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.

கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்ய வில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு. இன்றைக்கு லேசான தலைவலி என்றாலும், உடல் மெலிவதற்கு என்றாலும், சத்துப் பற்றாக்குறை என்றாலும் மாத்திரைகளாக உள்ளே தள்ளுகிறோம். இந்த மாத்திரைகள் எல்லாவற்றிலும் நச்சுத் தன்மை நிறைந்திருக்கிறது.

அந்த நச்சுத்தன்மையை உடலில் சேராமல் தடுத்து நம் உடலை பாதுகாப்பது கல்லீரல்தான். மதுவிலும் ஏராளமான விஷத்தன்மை உள்ளது. அந்த விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. 

கல்லீரல் விஷத்திற்கு எதிராக போராடும் வரைதான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேசமுடியும்.

கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சுக் கூட விடமுடியாது. அப்புறம் எங்கு வசனம் பேசுவது. கல்லீரல் ஒருவருக்கு சரியாக இல்லையெனில், சாப்பிடும் எந்த உணவும் செரிக்காது. உணவுப்பொருட்களை மட்டுமல்ல... மருந்து, மாத்திரைகள், ஆல்கஹால், ஏன் சமயத்தில் விஷத்தைக்கூடச் செரிக்கக்கூடிய சக்தி படைத்தது இந்தக் கல்லீரல்.

அத்தகைய முக்கியமானதொரு ஜீரண உறுப்பு இது. அதற்காக ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே; ரொம்ப நல்லது போல’ என்று தாறுமாறாக அதற்குக் கஷ்டம் கொடுக்கக் கூடாது. கண்மூடித்தனமாக அளவு கடந்து குடிக்கிறபோது கல்லீரல் வீக்கத்தைத் தடுக்க இயலாது.

கல்லீரலை கழுதையோடு ஒப்பிடுவார்கள். கழுதை எவ்வளவு பாரத்தை அதன் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருந்தாலும் அசராமல் சுமக்கும். அதே கழுதை படுத்துவிட்டால் திரும்பவும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது.

கல்லீரலும் அப்படிதான் தொடர்ந்து குடிக்க குடிக்க மது என்னும் விஷத்தோடு ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும் !
இத்தகைய கல்லீரலை காப்பாற்ற

~மதுவையும் புகையும் தவிர்க்க வேண்டும்.

~பால் கலந்த டீ, காப்பி மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

~ அதற்கு பதிலாக கருப்பட்டி காப்பி, சுக்கு காப்பி, பால் கலக்காத இஞ்சு டீ மற்றும் எலுமிச்சை டீ, இயற்கையான பழச்சாறுகள், கரும்புச்சாறு, பதநீர், மோர் போன்றவற்றை பருகலாம்.

~உணவை நிதானமாக மென்று விழுங்க வேண்டும். நமக்கு அசதியாக இருக்கும்போது ஓய்வுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

~முடிந்தவரை தொட்டதிற்கெல்லாம் ஆங்கில மருந்துக்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.~

நம் உயிர் காக்கும் கல்லீரலைக் காப்போம்! 
நலமாய் வாழ்வோம்!!

13 ஆகஸ்ட், 2020

நல்ல ஆசிரியர்

திருமிகு அ.த.பன்னீர்செல்வம் முன்னாள் ஆசிரியர்,
அரசினர் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை


தொலைக்காட்சியில் சாட்டை திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சமுத்திரக்கனி தன் வகுப்பில் ஆண்டு விழாப் போட்டிகளில் மாணவர்களை சேர்ந்திடச் சொல்லி வலியுறுத்துகிறார். தயங்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி போட்டிகளில் சேர்த்து விடுகிறார். 
இந்தக் காட்சியைப் பார்க்கும் போது,  எனக்கு பழைய ஞாபகம் தான் வந்தது.

நான் பட்டுக்கோட்டை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 1978-ல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது அப்போதைய வகுப்பாசிரியர் பள்ளி இலக்கிய மன்ற விழாவில் பேச்சுப்போட்டிக்கு மாணவர் பெயர் கேட்கிறார்.

ஒருவரும் ஆர்வம் காட்டி பெயர் தருவதற்கு எழுந்திடவில்லை.
சுந்தரம் என்ற மாணவர் சுமாரகப் படிப்பான். அவனுக்கு மனதில் ஆசை. 
தயங்கிக் கொண்டே தன் ஆர்வத்தை தெரிவிக்கிறான். 
ஆனால் அவனுக்கு உள்ளுக்குள் பயம். தன்னால், மேடையில் நின்று மைக் முன்பாகவும், அத்தனை பேர் முன்பாக பேச இயலுமா என்ற ஐயம் இருந்திருக்கலாம்.  அதற்கு முன்பாக, இம்மாதிரி மேடையில் பேசியதுமில்லை.

வகுப்பாசிரியர் அவனைத் தேற்றுகிறார்.
தலைப்பைச் சொல்லி அது குறித்து என்னவெல்லாம் தெரியுமோ அவற்றை கோர்வையாக வாக்கியமத்தை  முடிந்த விதத்தில் எழுதிவரச் சொல்கிறார்.
அவனும் அடுத்த இரண்டெரு நாளில் கட்டுரையாக எழுதிக் கொண்டு வருகிறான். 

ஆசிரியர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, அக்கட்டுரை குறித்து சில திருத்தங்களையும் ஆலோசனைகளையும் சொல்லி கட்டுரையை செம்மைப்படுத்தச் செய்து, அவனை வகுப்பில் எங்கள் முன்பாக பேச வைக்கிறார்.

பெரிதாக ஒன்றுமில்லை,
"உரக்கப் பேசு,
தேவையான இடத்தில் ஏற்ற இறக்கமுடன் பேசு எனச் சொல்லி அதனையும் பேசிக் காண்பித்தார். 
தமிழ் உச்சரிப்பை சரியாகச் செய், அதற்காக தினமும் விடாமல் பயிற்சி செய். 
கடைசிப் பத்தியில் தலைப்புக்கான கருத்தை அழுத்தமாக வலியுறுத்து..
பரிசு முக்கியமில்லை...
மேடையேறி பேசிவிட்டு வா.... அது போதும் !" 
இவ்வளவு தான் வகுப்பாசிரியர் அவனுக்குச் சொன்ன அறிவுரைகள்.

நான்கைந்து முறை வகுப்பு மாணவர்கள் முன்னிலையில் அவனைப் பேசச் சொல்லி சின்னச் சின்னத் திருத்தங்களை செய்தார். அவ்வளவு தான்.
பள்ளிஇலக்கிய மன்ற மேடையில் சுந்தரம் பேசினான். 

வகுப்பில் மறைவாய் அமர்ந்து யாருக்கும் பெரிதாய் தெரியாத அவன், மேடையில் பள்ளின் மாணவர்கள் யாவர் முன்பாகவும் பிரகாசமாய்த் தெரிந்தான்.
 
அதிகமாகப் பேசிப் பார்த்திடாத சுந்தரம் மேடையின் மீது அலையோசையாய் ஆர்ப்பரித்தான்.

என்ன ஆச்சரியம், பேச்சுப் போட்டியில் அவனுக்குத் தான் பள்ளியிலேயே முதல் பரிசு !

ஆனால், எங்கள் வகுப்பாசிரியர் அந்த பரிசுக்கான தகுதிக்கு சுந்தரமே இலக்கானவன் என்று அவனை பாராட்டி விட்டு ஒதுங்கி நின்றார்.
இப்போது நினைத்தாலும் நெகிழ்ச்சியில் உடல் சிலிர்க்கிறேன்.

அதன் பிறகு சுந்தரம் பள்ளியில் குறிப்பிடத்தக்க பேச்சாளரான மாணவனாகத் திகழ்ந்தான். அந்த பெருமை எங்கள் ஆசிரியரையேச் சாரும் என்று நாங்கள் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு; சுந்தரமும் தான்.

இப்படியும் வகுப்பாசிரியரால் இயங்கிடல் இயலும் என்று அப்போதே எங்களுக்கு உணர்த்தியவர் அப்போதைய எங்கள் வகுப்பாசிரியர், 
நாங்கள் மரியாதையுடன் ஏடிபி (ATP) சார் என்றழைக்கும்
திரு.A.T. பன்னீர் செல்வம் அவர்கள்.

ம்ம்ம்... இப்போதெல்லாம் ஏடிபி.க்களை சினிமாவில் தான் பார்த்துக் கொள்ள இயலுமா?

இப்போதெல்லாம் ATP-மாதிரியான ஆசிரியர்கள் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கிறார்களா?

இப்போதைய இளம் தலைமுறையினர் தான் சொல்ல வேண்டும்.


11 ஜூலை, 2020

கொரோனா ஒழிப்பு மக்கள் கையில்


குறுகலான காய்கறிக் கடையில்
என் முறைக்காக
வரிசையில் காத்திருக்கையில்
ஒரு இளம்பெண் எங்களைக் கடந்து
"சமூக இடைவெளியாவது மண்ணாவது" என்பதாக உள்ளே செல்கிறாள்...

முகக் கவசத்தை தன் தாடையில்
அணிந்திருக்கிறாள்.

கையில் பையும் இல்லை.
கடைக்காரரிடம் "கேரி பை இருக்காண்ணா" எனக் கேட்கிறாள்.

ஃபோனில் ஆங்கில உரையாடல்.
உடையிலும் உதட்டுச் சாயத்தினாலும் 
தன்னை மேல்தட்டென்றும்
மெத்தப் படித்தவளென்றும் காட்டியது...

இவள் படித்து என்ன பயன்?

இந்த மாதிரி
பொறுப்பில்லாதவர்கள் இருக்கும் வரை
எத்தனை மாண்புமிகு முதல்வர்கள் வந்தாலும்
எத்தனை மாண்புமிகு சுகாதார அமைச்சர்கள் வந்தாலும்
எத்தனை துறைச் செயலர் IASகள் வந்தாலும்
எத்தனை மாநகர ஆணையர் IASகள் வந்தாலும்
எத்தனை மருத்துவர்கள், போலிஸ்காரர்கள், 
முன்களப் பணியாளர்கள் என
ஊழியர்கள் உயிர் கொடுத்து பணிபுரிந்தாலும்...
எத்தனை ஆண்டானாலும்
எந்த ஆண்டவனாலும்
கொரோனாவை
ஒழிக்கவே முடியாது...
முடியவே முடியாது...

25 மே, 2020

உழைக்கும் மகளிர்

ஸ்விக்கியிலிருந்து அலைபேசி அழைப்பு...
"சார் உங்கள் அலுவலகம் அருகில் வந்து விட்டேன்.
உங்கள் அறைக்கு எப்படி வரவேண்டும் சார்?"
---என்றது ஒரு பெண் குரல்.
எனக்கோ ஆச்சரியம்.

ஸ்விக்கி உணவு விநியோக நிறுவனத்தில் இப்போது பெண்களும் வருகிறார்களா?

ஆம். சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசலில், தாங்கவே முடியாத வெயிலில் ஆண்களுக்கே சவாலான இந்தப் பணியை மேற்கொண்டு, மோட்டார் சைக்கிள் ஓட்டிக் கொண்டு இந்த கடும் பணியை ஒரு பெண் புன்னகையோடு செய்கிறாரே.

இந்தப் பணிக்காக இந்தப் பெண் வலிகளை சுமந்து கொண்டு வருகிறாரே, இவர் ஏன் இந்த வேலையை தேர்ந்தெடுத்தார். என்னதான், அவரவர் வசதிப்படி நேரநிர்ணயம் செய்து கொண்டு தன்னிச்சையான தேர்வாக வேலையை செய்தாலும், இதில் ஆண்களைக் காட்டிலும் கொஞ்சம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்குமே.

சாப்பாட்டை கையில் வாங்கியவுடன் என் மகள் வயதில் இருந்த அந்த பெண்ணை மனதார வாழ்த்தினேன். இவரின் கடும் உழைப்பிற்காகவே வாழ்க்கையில் சிறப்பான இடத்தை அடைய வேண்டும். விரைவில், நல்லதொரு வாழ்க்கைத் துணையுடன் மகிழ்வான வாழ்வை சுகித்திட வேண்டும்.

ஆனாலும், நான் அந்தப் பெண்ணின் வியர்வைத் துளித்திருந்த முகத்தினைக் கண்ட பின்னும் ஏ.சி. அறையில் வேலைக்கேற்ற ஊதியத்தை விடவும் கொழுத்த சம்பளம் வாங்கிக் கொண்டு ஒய்யாரமாய் சொகுசு வாழ்க்கை வாழும் என்னால் அந்த மதிய நேரத்து உணவை ருசித்துச் சுகித்து உண்ண முடியவில்லை.

ஆண்களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பெண்கள் வந்து சாதிக்கிறார்கள் என்பது ஒருபுறம் மகிழ்ச்சி தரக் கூடியது தான். இருந்தாலும், இவர்கள் பெட்ரோல் பங்கில், லாரி ஆட்டோ ஓட்டுவது, மிகவும் உயரமான கட்டுமானப் பணிகளில் வேலை செய்வது, போன்ற பெண்களின் இயல்புநிலைக்கு மாறான சூழலை உருவாக்கக் கூடியதும், அவர்களின் வலிமைக்கு சவாலானதும், கொஞ்சம் இல்லை சில சமயங்களில் நிறையவே சங்கடங்களையும் தரக் கூடிய இம்மாதிரியான வேலைகளை அவர்கள் மிகவும் விரும்பி தேர்வு செய்து ஆண்களோடு போட்டியிடுகிறார்கள் என்றால் மிகையில்லை.

ஆண்களில் உழைக்காமல் வெறுமெனே சுற்றித் திரிந்து காலத்தையும் வாழ்க்கையையும் தொலைப்போர் மத்தியில் இந்த உழைக்கும் மகளிரை போற்றிடத் தான் வேண்டும்.

29 ஏப்ரல், 2020

தன்னம்பிக்கையே கொரோனாவுக்கான மருந்து

ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதலே ஏழரை மணிக்கு முன்பாக எழுவதேயில்லை என்று ஆழ்மனத்திற்கு சத்தியம் செய்து கட்டளையிட்டாயிற்று.

போன ஞாயிறு அன்று காலை 8 மணியிருக்கும். பல்துலக்கி விட்டு நியூஸ் கேட்கலாம் என்று லாப்டாப்பை தட்டினேன். வழக்கம் போல் என் இல்லத்தரசி இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் தூள், இத்தியாதிகள் போட்டு தந்த கஷாயத்தை சுவைத்துக் கொண்டே பீலா மேடம் பேட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன்.

சாலையில் க்ரீச்... என்று கார் வந்து நின்ற சப்தம். என் வீடு முதல் தளத்தில். வீட்டின் ஹாலில் நின்று பார்த்தால், சாலை தெரியும். சன்னல் வழியே பார்த்தால், டவேரா காரில் இருந்து ஸ்டெதாஸ்கோப்புடன் ஒருவர் இறங்கினார். டாக்டரே தான். பின் இருக்கையிலிருந்து ஒரு பெண், ஊதா நிற சீருடையில் இளவயது நர்ஸ். கூடவே மோட்டார் பைக்குகளில் இரண்டு மூன்று இளைஞர்கள். அவர்கள் கழுத்தில் அடையாள அட்டைகளை போட்டிருந்தனர். அவர்கள் மாநகராட்சி ஊழியர்களாக இருக்க வேண்டும்.

கார் நின்ற வேகத்தில் பரபரப்பானார்கள். எங்கள் குடியிருப்பினுள் அங்கும் இங்குமாய் ஓடினார்கள். எங்கள் செக்யூரிட்டி பேசுவது சன்னமாய் கேட்கிறது.

நான் கொஞ்ச நேரத்திலேயே பதற்றமாகிவிட்டேன்.

என் மனைவியை அழைத்துச் சொன்னேன். இதோ பார், டாக்டர் குழு நமது குடியிருப்பிற்கு வந்துள்ளது, ஏதோ கொரோனா தொற்று ரிப்போர்ட் ஆகியுள்ளது போலும்.

நெஞ்செல்லாம் இடி இடித்தது. கற்பனை எங்கோவெல்லாம் செல்லத் துவங்கியது.

மனைவியிடன் சொல்லத் துடிக்கிறேன். இந்த பகுதியை தனிமைப்படுத்தி விடுவார்கள். வெளியே எங்கும் செல்ல இயலாது.
தினம் தினம் முழு பயத்தோடு வாழ்க்கை. அவசரமாக ஒரு பொருள் வாங்கிட வேண்டுமானால் கூட மிகவும் சிரமத்திற்குள்ளாக நேரிடும்.
அலுவலகத்திற்கு தகவல் சொல்ல வேண்டுமே.

முக்கியமான கோப்புகள் என் வசம் மாட்டிக் கொண்டு விட்டனவே, அவற்றை எப்படி என் மேலதிகாரியிடத்தில் ஒப்படைப்பது?

சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு கீழே போய் விசாரிக்க ஆயத்தமானேன். அந்த நர்ஸ் அதற்கு யார் வீட்டிற்குள்ளோ போய் விட்டு, திரும்ப கார் அருகே வந்திருந்தார். டாக்டர், அந்த ஊழியர்களுக்கு அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார். அடுத்து வேறு வீட்டை எண்ணை சொல்லி எங்கள் செக்யூரிட்டியிடம் விசாரிப்பதை புரிந்து கொண்டேன்.

விடுவிடுவென கீழே இறங்கினேன். முதலில் செக்யூரிட்டியிடம் விசாரித்தேன்.

அவர் சொன்னார், இங்கே பக்கத்து அப்பார்ட்மெண்டில் ஒரு அம்மையாருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருமலாம். தினசரி வீடுவீடாக வரும் சுகாதாரப் பணியாளர் ஒருவர் ரிப்போர்ட் செய்து விட்டார். அதனால், மருத்துவ பரிசோதனை செய்ய வந்தார்களாம் என்றார்.

வேறொரு முகவரி சொல்கிறார்களே என்றேன்.
அது, நம் பிளாட் இல்லை சார்… அது பக்கத்து தெரு என்றார்.
கொஞ்சம் நிம்மதி வந்தது. 

டாக்டரிடம் என்னவென்று கேட்கலாம் என கேட்டைத் திறப்பதற்குள் காரில் ஏறி பறந்து விட்டார்.

எங்கள் ஏரியாவுக்குள் கொரோனா பரிசோதிக்கும் மருத்துவர் குழு வந்ததற்கே இந்த படப்படப்பு என்றால்,
கொரோனா வந்தால்…?????

அப்புரம் ஆற அமர தெளிவாக ஒரு முடிவுக்கு வந்தேன்.
எது வந்தாலும், எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்.
வருமென்று எதிர்பார்த்திருக்க வேண்டாம்.

வந்தாலும், வரட்டும் பார்க்கலாம், மோதி விடலாம்.
தன்னம்பிக்கை தானே எல்லாவற்றுக்கும் மருந்து?