Powered By Blogger

11 ஜூன், 2021

"இந்தி நஹி மாலும்"


இந்த அறிவாளி பதிவர் யாரென்று தெரியவில்லை.

இந்தி படிப்பது அவரவர் விருப்பம்.
அது தப்பில்லை.

பிணத்தின் சாம்பல் கரைக்கவெல்லாம் இந்தி படிக்கச் சொல்கிறாரே, இந்த பதிவருக்கு நிஜமாவே அறிவு இருக்கா? தெரியவில்லை. 

முதலில் ராமேஸ்வரம் வருகின்ற வடநாட்டவரை எல்லாம் தமிழ் கற்றுக் கொண்டு வரச்சொல்லட்டும் பார்ப்போம்.

ஏக், தோ, தீன், ச்சார், பாஞ்ச்...
மேரா, தும், நஹி, க்யா, ஹைய்... தவிர வேறெந்த இந்தி வார்த்தையும் தெரியாத நான்,
என் அலுவலக ரீதியான வேலைகளுக்காக ஆறு வருடங்கள் மாதம் ஒரிரு தடவையாவது டெல்லி போய் வந்திருக்கிறேன்.
எத்தருணத்திலும் எங்கும் எனக்கு இந்தி தேவைப்படவில்லை.
அதனால், எங்கும் எவரிடமும் தடுமாறி அல்லல் படவில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்பு குடும்பத்தோடு டில்லி, ஆக்ரா, ராஜஸ்தான், டேராடூன், முசோரி என வடமாநிலங்களில் காரில் பயணித்து ஓட்டல்களில் தங்கி சாப்பிட்டு ஒரு வாரத்திற்கும் மேலாய் சுற்றி...
ஒரு சுகமான, ஹிந்தியில்லா இன்பச்சுற்றுலா அனுபவித்து வந்தோம்...

பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம் என...
அடுத்ததொரு சுற்றுலா கூட போகப் போகிறோம்... 
"இந்தி நஹி மாலும்" என்ற கோஷத்தோடு...  






18 மே, 2021

கரிசல் மண்னின் மைந்தனுக்கு அஞ்சலி

 


கரிசல் மண்ணின் மகனார்

கி.ராஜநாராயணன்
--------------------------------
மறைவு 17.5.2021
--------------------------------

கரிசல் மண் ஈன்றெடுத்த

இலக்கியக் களஞ்சியமே

சொல்லிலும் நடையிலும்

புதுமை தந்து

எமை ஈர்த்த பெருமகனே

நீ மறையவில்லை

உன் அழகு எழுத்துக்களால்

எம் இதயத்தில் கதைகள் ஆயிரம்

சொல்லிக் கொண்டிருக்கிறாய் தினம் தினம்

அமைதி கொண்டு எங்களையும் ஆள்வீர் பெருமகானே

அஞ்சலி

11 மே, 2021

கொரோனா பரப்பாளர்கள்






கொரோனாவா?
வந்து பாரு என்கிறார்கள்
சென்னைவாசிகள்...

சென்னையில் யாரும் அடங்கவில்லை.

நேற்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இங்கே சென்னையில் பொதுமக்களில் பலரும், மளிகை, காய்கறி, மீன் மார்க்கெட், கோழிக் கடைகளில் சமூக இடைவெளியெல்லாம் கடைப்பிடிக்கவில்லை.

காய்கறிக் கடைகளுள் முண்டியடித்துக் கொண்டுதான் நிற்கிறார்கள். நாம், மதிப்பளித்து வரிசையில் நின்று அவர்கள் வெளியே வரட்டும், பிறகு நாம் செல்லலாம் என்று காத்திருந்தால், நமக்கு பின்னால் வருபவர் அவர் வரிசையைக் கருத்திற் கொள்ளாமல் நம்மை முந்திக் கொண்டு கடைக்குள் போகிறார். என்ன நாகரிகம் என்றே புரியவில்லை. 

கையில் ஆப்பிள் போன், அரை டவுசர், பேசுவது ஆங்கிலம் என்ற உயர்தட்டின் குணங்களைக் கொண்டிருந்தும் அவருக்கு அடிப்படையான புத்தி கூட இல்லையெனும் நிலையை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.

முகக் கவசம் அது மூக்கிற்கும் கீழ் இருந்தால் கூட பரவாயில்லை எனும்பட்சத்தில், தாடையில் தொங்கிக் கிடக்கின்றது.
அரசாங்கம் எல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நம் சுயத்தை காற்றில் பறக்க விட்டோமோ?

நமக்கென்று பொறுப்பு இல்லை. கடமையுணர்வு இல்லை. அக்கரை இல்லை. குறைந்தபட்ச விழிப்புணர்வு இல்லை. பயமில்லை.
எப்படி கொரோனா ஒழியும்?

போலீஸ் தடி எடுத்த போதெல்லாம், சமூகங்களெல்லாம் கதறினோம். சாலையின் நடுவே வைத்து தண்டித்த போதெல்லாம் கோஷம் எழுப்பினோம்.

ஆனால், எனக்கென்னவோ கொஞ்சம் கடுமை காட்டினால் தான் இங்கே சென்னை மக்கள் அடங்குவார்கள் போலிருக்கிறது.

நேற்று பாருங்கள், ஒரு குடிகாரன் போலீஸ் காரர்களிடம் சாலையில் நின்று தகராறு செய்கிறான். ஐந்து வருடம் எங்களை ஒன்றும் செய்ய இயலாது என்று சவால் விடுகிறார். காவல் துறையினரும் அசாத்திய பொறுமை காக்கின்றனர். ஆளுங்கட்சி அமைச்சரிடம், எம்எல்ஏ.விடம் நாம் வளைவது எதார்ததம். ஆனால், தெருவில் நின்று பிதற்றும் குடிகாரர்களிடம் ஏன் காவல்துறை கைகட்டி நிற்கின்றதோ?

திரிபாதி சார்.... ஈவிரக்கம் காட்டாதீர். கொஞ்சம் வந்து லேசாய் லட்டியைத் தூக்கி தரையில் தட்டியாவது பயங்காட்டி அடக்குங்கள் இந்த சென்னை கொரோனா பரப்பாளர்களை... 

புண்ணியமாகப் போகும்.

27 ஏப்ரல், 2021

தெய்வமாகும் மதுப் பிரியர்கள்

 




அப்பா
ஒரு மொடாக் குடிகாரர்
தினம் தினம்
கள்ளோ விஷம் கலந்த சாராயமோ மதுக்கஷாயமோ
அவரது பானம்

நள்ளிரவில்
தள்ளாடித் தள்ளாடி வரும்
அப்பாவுக்கு சுடுசாதம் போட
எத்தனிக்கும் என் அம்மாவின்
பரிதவிப்பை பாசம் என்பதோ, பயம் என்பதோ?
தொட்டுக் கொள்ள
உணக்கையாயில்லை என
அடித்து உதைத்து எல்லோரையும் சிதறடிப்பார்

என்னை பக்கத்து வீட்டு
மீசை மாமா மாரியப்பனின் மனைவியும்
ஒன்றரை வயது என் தம்பியை
எதிர் வீட்டு அரிசிக் கார அம்மாவும்
தஞ்சம் தந்து ஆதரிப்பார்கள்

அம்மாவோ
கிணற்றடியில் தண்ணீர் தொட்டிக்குப் பின்னால்
ஒளிந்து கொண்டு இரவைக் கடப்பாள்...
பண்டிகை நாட்களில்
விடிந்ததும் காணாமல் போகும் அப்பா
மறுநாள் சாமத்தில் வருவார்
தெருக் குழந்தைகள்
கொண்டாட்டத்தை ஏக்கமாய்
பார்த்து தம்பி உறங்கியே விடுவான்

எனக்குள் பொதிந்த ஏக்கங்களை
என் மௌனம் கொண்டு 
மென்று விழுங்கி மூலையில் தஞ்சமடைவேன்.

எங்கள் வீட்டில் 
நாட்களும் மாதங்களும் ஆண்டுகளும்
கரிய நாட்களாகவே கிழித்தெரியப்படும்

இப்படியாக...

... ... ... ... ... ... ... ... ...

என் பதினோறாம் வயது...
ஆறாவது படித்த சமயம்
அப்பாவை பெரியாஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள்
அவருக்கு ஈரல், குடல் யாவும்
சாராயம் அரித்துப் போனதாக
சித்தப்பாவும் பெரியத்தானும் பேசிக் கொண்டார்கள்

ஓர் அதிகாலைப் பொழுதில்
பெரிய அத்தானும்
என் சித்தப்பா சின்னம்மா மூவருமாக
என்னை வாரிக் கட்டிக் கொண்டு அழுதார்கள்
என் அப்பா செத்து விட்டாரென்று...

வாழ்ந்த கொஞ்ச நாளிலும்
அப்பாவின் நல்ல முகத்தை 
ஒரு நாளும் காணாத எனக்கு 
ஏனோ அழுகையே வரவில்லையே!

உற்றார் உறவினர் ஒப்பாரி ஓலங்களை
வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்...
தம்பியோ வெற்று சிகரெட் அட்டையில் 
ரயில் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான்

எங்கள் இருவருக்கும் அது 
வழக்கமாய் வந்து போன நாளாய் போனது

ஆண்டுகள் பல கடந்தன...

வீட்டில் சுடும் இட்லியைக் கூட
அப்பாவின் படத்தின் முன்பாக
படையலிட்டு நீர் விளாவி
திருநீறு பூசிய பின்னரே
பரிமாறுவாள் அம்மா...

எவனோ ஒரு சாமியாடி சொன்னானாம்
அப்பா இந்த வீட்டில்
தெய்வமாய் இருக்கிறார் என்று!

மதுப் பிரியர்கள் 
தெய்வமாகி விடுகிறார்கள்,
செத்துப் போனபின்பு!

14 ஏப்ரல், 2021

குற்றங்களும் இலக்கும்




குற்றங்களுக்கு இலக்கா?

வாட்ஸ் அப்-பில் ஒரு ஒலிக்கோப்பு பரவிக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு காவல் துறை அதிகாரி வயர்லெஸ் கருவி வாயிலாக வாய் மொழி உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்.

அதில், ஒவ்வொரு காவல் நிலையத்திற்குமாக இன்னின்ன வகைகளுக்கு இத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கிறார்.

அதில் ஒன்று , முகக் கவசம் அணியாத வகையில் 100 பேர்.
மற்றொன்று, சமூக இடைவெளி கடை பிடிக்காதோர் 3 பேர்.
வேறு சில இனங்களுக்கும் சில எண்ணிக்கைகளை இலக்குகளாக நிர்ணயிக்கிறார்.

இது அநேகமாக, அவரது உயரதிகாரியால் நிர்ணயிக்கப்பட்டு, அவர் அதை தம் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களுக்கு நிர்ணயித்து தகவல் தெரிவிக்கிறார் போலும்.

தற்போதுள்ள கொரோனா பரவல் காரணமாக, அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளின்படி, வெளியே வரும் அனைவரும் சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும், ஒவ்வாருவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது தான்.

அது என்ன, 100 பேருக்கு அபராதம் விதிப்பதற்கான இலக்கு.?
சமூக இடைவெளி கடைபிடிக்காத இடங்களில் அது என்ன 3 பேருக்கு அபராதம்?

குற்றங்களை தடுக்க வேண்டும், குற்றவாளிகளை பிடிக்க வேண்டும், குற்றம் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், பாதுகாப்பு தர வேண்டும் என்பது தானே காவல்துறையின் தலையாய பணியாக இருக்க முடியும்?

இத்தனை எண்ணிக்கைக்கு குற்றங்களை கண்டு பிடிக்க வேண்டும் என்பது எப்படி இலக்காக முடியும்?

ஒருவேளை, ஒரு காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் பெரும்பாண்மை முகக் கவசத்தோடும், சமூக இடைவெளியை பின்பற்றியும் நடந்து கொண்டதாக இருந்து, 100 + 3 இலக்கை எட்டவில்லை என்றால், அதற்காக அந்த காவல் நிலைய அதிகாரிகளை மேலதிகாரிகள் கேள்வி கேட்பார்களா?

அதற்கு காவல் நிலைய அதிகாரிகள், இல்லை இல்லை, எங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இத்தனை எண்ணிக்கை குற்றம் நிகழவில்லை என்று நியாயப்படுத்தினால் உயரதிகாரிகள் ஏற்பார்களா?

காவல் துறையினருக்கு கடமையும், சட்ட திட்டங்களுக்குட்பட்ட பணியும் தானே?

சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். குற்றங்கள் நடவாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதை மீறி குற்றங்கள் நடந்தால் அவற்றை பிடிக்க வேண்டும். குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். அவ்வளவு தானே?

ஆனால், இப்படி குற்றங்களுக்கு இலக்கு நிர்ணயித்தால், குறைவான குற்றங்களுள்ள பகுதியில் அந்த காவலர்கள் என்ன தான் செய்வார்கள், பாவம்?

மற்றைய துறையினருக்கு நல்லதுக்கு தான் இலக்குகள் இருக்கும்.

இத்தனை பேர்க்கு நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
இத்தனை மாணவர்களுக்கு இன்னின்ன வழங்க வேண்டும்.
இத்தனை மரம் நடவேண்டும்.
இத்தனை பேருக்கு வீடு கட்டித் தர வேண்டும். இத்தனை கழிவறைகள் கட்ட வேண்டும்.
சாலை போட இவ்வளவு ரூபாய் செலவிட வேண்டும்.
இப்படியானவை தானே இலக்கு?

ஆனால், காவல் துறையோ...
இத்தனை பிக் பாக்கெட் கேஸ் போட வேண்டும். இத்தனை திருட்டு கேஸ் பிடிக்க வேண்டும்.
இத்தனை செயின் அறுப்பு கேஸ் போட வேண்டும். இத்தனை சந்தேக கேஸ் போட வேண்டும்.
இத்தனை ஹெல்மெட் போடாதோர் அபராதம் போட வேண்டும்.
இத்தனை லைசன்ஸ் இல்லாதோர் அபராதம் போட வேண்டும்.
இப்போது, கொரோனா காலத்தில் 100 முகக்கவசம் இல்லாதோரை பிடிக்க வேண்டும்.
மூன்றே மூன்று சமூக இடைவெளி பின்பற்றாதோரை பிடிக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு மேல் குற்றம் நடந்தால் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாமா?

நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு குற்றங்களைக் காண இயலவில்லை என்றால், யாரையாவது எவரையாவது பிடித்து பொய் வழக்கு போட்டுக் கொள்வதா?

அப்படித் தான் இருக்கிறது காவல் துறையின் சித்தாந்தம்.

கீழ்நிலையில் பணிபுரியும் காவலர்களுக்கு ஏற்கெனவே அதிகளவு பணிப் பளு மற்றும் நெருக்கடிகள் உள்ளன. இப்படி குற்றங்களுக்கு இலக்கு நிர்ணயித்து இலக்கு என்ற சொல்லின் சித்தாந்தத்தை சீர்குலைக்கிறார்கள்.

மக்களையும் வதைக்கிறார்கள்.

இலக்கு என்பது வளர்ச்சிக்கானதே அன்றி, மேலதிகாரியின் ரிவீவ்க்காக மேசையில் வைக்கப்படும் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டுக்கானது அல்ல.