Powered By Blogger

21 டிசம்பர், 2022

தேவை ஒரு முட்டாள்

 


எலான் மஸ்க் கூறுவது என்னவோ உண்மைதான்.

பெரும்பான்மை உயர் பதவி வகிப்பவர்கள் தமக்கு கீழே, தாம் சொல்வதைக் கேட்டு அதை எதிர் கேள்வியின்றியும், மாற்று யோசனை இன்றியும் செயல்படுத்தித் தர ஒரு முட்டாள் இருந்தால் போதும் என்று நினைப்பார்கள்.

தாம் அவ்வாறு சொல்வது நியாயமானதா சட்டத்திற்குட்பட்டதா அவர் சொல்வதைக் காட்டிலும் நல்லதொரு யோசனையை தமக்குக் கீழே வேலை செய்பவர் வைத்திருப்பார் என்பதெல்லாம் குறித்து மேலதிகாரிகளுக்கு கவலை கிடையாது. சொல்வதைக் கேட்க ஒரு இலகுவான ஆள் தேவை, அவ்வளவே. அவர்களுக்கு இடப்பட்ட பெயர் முட்டாள். 

அவர்களுக்கு என்று ஒரு கோட்பாடு வைத்திருப்பார்கள்; நினைத்த மாத்திரத்தில் அதை எதிர்த்து கேள்வி கேட்காமல் செயல்படுத்த அவர்களுக்கு முட்டாள்கள் என்ற பெயரில் தேவைப்படும்.  உண்மையில் தலைமைப் பண்பு என்பது இங்ஙனம், சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டு செய்கிற அடிமாட்டுக் கூட்டத்தை மேய்க்கின்ற விஷயம் கிடையாது.  

இங்கே நம் அரசுத் துறைகளில் கூட நிறைய ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட மேலதிகாரிகள் தனக்கு கீழே இருப்பவர்கள், அவரை விடவும் நுண்ணறிவும் திறமையும் பெற்றவர்களாக இருக்கக் கூடாது என நினைப்பவர்கள் நிறைய பேரை பார்த்திருக்கின்றேன். 

ஒரு அலுவல் சார்ந்த காரணத்துக்காக அரசியல்வாதி ஒருவரை நான் எதிர்த்து பேசியதைத் தொடர்ந்து அவர் அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட, உடல் மனம் என எங்கும் சர்வாதிகாரத் தன்மை பொதிந்த அந்த மாவட்ட ஆட்சியர் என்னை ஆய்வுக் கூட்டத்தில் விஷயத்தை நேரடியாக விவாதிக்காமல் மறைமுகமாக பிரச்னையை மையமாக வைத்துக் கொண்டு என்னை சாடினார். அப்போது, சுதாரித்த நான், அரசியல்வாதியோடு ஏற்பட்ட மோதல் குறித்த பிரச்னையைத் தான் ஆட்சியர் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்டு கையில் வைத்திருந்த ஆதாரங்களை அவரிடம் காட்டி விளக்க முயன்ற போது அவரோ என் வாதங்களைக் காது கொடுத்து கேட்காமல், "போய் இருக்கையில் உட்கார்ந்து நான் சொல்வதை மட்டும் கேள்" என்றார். 

"நான் சொல்வதைக் கேட்கும் ஒரு முட்டாள் போதும் எனக்கு" ...
...எதிர்த்து கேள்வி கேட்கும் நேர்மையாளர் மீது அவ்வப்போது வந்து விழும் வார்த்தைகள் இவை...!

இப்படியான ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் பெரும்பாண்மையாக வைத்துக் கொண்டு இந்த நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் நாடு இந்த லட்சணத்தில் போய்க் கொண்டிருக்கிறது. 

எலான் மஸ்கின் கூற்றும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது. ட்விட்டர் உருப்பட்ட மாதிரி தான். 

14 டிசம்பர், 2022

டீ மாஸ்டரும் கடவுளரும்

அந்த தெரு முனை தேநீர்க் கடை…

தனித்துவமிக்க வகைவகையான தேநீருக்காகவும் பலகாரங்களுக்காகவும் எப்போதும் கூட்டம் அலைமோதும்

உரிமையாளரிடம் காசுகொடுத்து தேவையான தேநீருக்கென அடையாள வில்லை பெற்று வந்து அந்த ஆஜானுபாகு டீ மாஸ்டரிடம் நீட்டுவார்கள்

ஒவ்வொருவருக்கும் ஒரு தேர்வு இருக்கும்

ஒருவர் “நாட்டுச் சர்க்கரை டீ” என்பார்

இன்னொருவருக்கு “சர்க்கரை கம்மி”

நண்பர் கூட்டமொன்று “நான்கில் 1 மீடியம், 1 சர்க்கரை கம்மி, 2 ஸ்ட்ராங்”

நடைபயிற்சி முடித்து வந்த ஒரு முதியவர் ஒரு கையில் மசால் வடையை சுவைத்தபடி, “மாஸ்டர்… சர்க்கரை தூக்கலா…”

சைக்கிள் ஓட்டப் பயிற்சி முடித்து வந்த ஐந்து இளைஞர்களின் தேர்வு

“அண்ணே! ஒரு லெமன், ரெண்டு இஞ்சி டீ, 2 ஸ்ட்ராங்க்”

அடடே… மனிதர்களுள் இந்த தேநீரில் மட்டுமே எத்தனை விதவிதமான தேர்வுகள்

ஆனாலும் அந்த ஆஜானுபாகு டீ மாஸ்டர் அசரவேயில்லை

அவருக்கு வயது 45 லிருந்து 50 இருக்கலாம். கவனம் எதிரே நிற்பவரின் குரல்கள், தேநீர் குவளைகள், தேயிலை வடிநீர், கொதிக்கும் பால், குவளைகள் அத்தோடு எரியும் அந்த எரிவாயு அடுப்புகளின் சூடு ஏற்றி இறக்கும் குமிழ்கள்…

அவரின் இரு கைகளும், கைவிரல்களும், கண்களும் பரபரக்கும் காட்சி…

ஒரு இயந்திரத்தை விடவும் வலிமையானவராகவும், சிரத்தைமிக்கவராய்த் தென்பட்டார்.

பரபரப்பான தேநீர் கடைகளில் இம்மாதிரியான தொழிலாளர்களைப் பார்த்து நான் மிகவும் வியப்பதுண்டு

எப்படி இவர்கள் இப்பணியைப் பொறுமையாக செய்கிறார்கள்

வாடிக்கையாளர்களின் வெவ்வேறு விதமான தேர்வுகளை உள்வாங்கி கோப்பைகளை வரிசையாக்கி சீனி நாட்டுச் சர்க்கரை எலுமிச்சை சாறு இஞ்சிச் சாறு (சர்க்கரை அளவிலும் முழுசு/அரை/தூக்கல்(!) என வகைப்பாடுகள் வேறு) கொதிக்கும் நீரில் இருந்து தேயிலைச் சாற்றை ஒத்த அளவாய் கோப்பைகளில் இட்டு பால் கலக்கும் போது மீடியம் ஸ்ட்ராங்க் தேர்வுகளை மனதில் வைத்து

அப்பப்பா…

இதற்கிடையே முதலில் வந்த எனக்குத் தராமல் எனக்கு அப்புறம் வந்த அவருக்கு எப்படி தரலாம்?

அரை மணி நேரமாய் நிற்கிறேனே நான் சொல்வதை காதில் வாங்காமல் என்னய்யா டீ போடுகிறீர்கள்??

தப்பித்தவறி தேநீர் சுவை மாறினால் என்னையா டீ இது???

அடடா… !

அந்த ஆஜானுபாகு மனிதர் அசரவே இல்லையே

அதே புன்னகை அதே பரபரப்பு அதே வேகம் பணியில் சிரத்தை

அந்தச் சூழல் அவருக்கு ஒரு சிறை தான் போலும். நினைத்தாலும் சட்டென விட்டு விலகி வந்து ஒரு நிமிடம் கூட ஓய்வு கொள்ள இயலவில்லை

அது அவரது பிழைப்பு

ஆனாலும் அவர் என் கண்களுக்கு கடவுளராய்த் தெரிந்தார்

ஆம்…

கோயில்களில் கடவுளர் முன்னே இந்த மனிதர்களின் எத்தனை வகைவகையான கோரிக்கைகள்

என் பிள்ளை நல்லா வரணும்

என் பொண்ணு போற இடத்தில் சவுக்கியமா வாழனும்

என் அம்மா இன்னும் கொஞ்ச நாள் எங்கு கூட வாழனும்

எங்க வீட்டுக்காரர் குடிக்காம கொள்ளாம திருந்தி வாழும் சாமி

இந்த வருஷமாவது எனக்கு புரோமேஷன் வரனும்

… … … …

ஒருவேளை அந்தக் கற்சிலைகள் உண்மையில் கடவுளராய் இருக்குங்கால்,

அவரும் இந்த டீ மாஸ்டரை போல், தம்முன் கைகூப்பி நின்று வணங்கும் ஆயிரம், இலட்சம், கோடிக் கணக்கான பக்தர்களின் பலவகையான கோரிக்கைகளை எல்லாம் எங்ஙனம் உள் வாங்குவார், அருள் பாலிப்பார், யாரறிவர்?

பக்தன் கேட்டனவற்றை எத்தனை மணி எத்தனை நாள் எத்தனை வருடங்களில் வழங்கித் தன் கடமை தீர்ப்பாரோ? யாரறிவர்?

உண்மையில் கடவுளர்கள் வழங்குகிறார்களோ இல்லையோ, இதோ இங்கே இந்த டீ மாஸ்டர் ஒரு குரல் கோரிக்கையை கேட்ட மாத்திரத்தில், ஒரு சில நிமிடங்களில் கேட்டபடி வகைவகையிலான தேநீர் நம்  கைகளில்!

டீ மாஸ்டரே! நீர் கடவுளர் அய்யா!

16 அக்டோபர், 2022

தோல்வியும் இலக்கும் !

"இலக்கு என்பது தோற்பினும், தொலைவைக் கடந்து முடித்தல் என்பது வீரனுக்கு அழகு"

"ஓட்டப்பந்தயத்தில் முதன்மையாக வந்து வெற்றி பெறாவிடினும் ஓடுதளத்தின் முழு தொலைவையையும் ஓடி முடித்தல் தோல்வியிலும், இலக்கை நிறைவு செய்தலாகும்"

இந்தப் பாடத்தை எம் பள்ளி எனக்கு சொல்லித் தந்ததொரு சம்பவம்.

1980-களில் நான் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்த சமயம். பள்ளி ஆண்டு விழாவுக்காக விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

அப்போது, எனக்குள் ஒரு ஆசை; ஒரு போட்டியிலாவது கலந்து கொண்டு ஒரு கோப்பையாவது வென்றிட வேண்டும் என்பது...

100 மீட்டர் ஓட்டப்பந்தயம்; நான் முதலாவதாக கலந்து கொண்டது.

என் சிறுவயதில் நான் வேகமாக ஓடும் திறம் கொண்டவன் என்ற மனப்பாங்கு எப்படியோ என்னுள் இருந்து வந்திருக்கிறது. நெருங்கும் பேருந்தை ஓடிப்போய் பிடிப்பது, துரத்தும் நாயிடம் தப்பித்து ஓடுவது, தோசை ஊற்ற அம்மா அவசரமாய் எண்ணெய் வாங்கிவரச் சொன்னதும் ஒரே ஓட்டமாய் ஓடிச் சென்று வாங்கி வந்தது, சினிமாவுக்கு நேரத்தில் போக வேண்டி ஓடிச் சென்று டிக்கெட் வாங்கியது... இப்படியாக என்னுள் நிறைய ஓட்டத்திறமைகள் இருந்தமையை நான் ஓட்டப்பந்தய வீரனாக மனதினுள் வடித்து வைத்திருந்த கற்பனையில் ஓட்டப் பந்தயமும் என் இலக்கில் ஒன்றாயானது.

என் வகுப்பு நண்பன் ராஜசேகர், பள்ளி தடகள விளையாட்டுப் போட்டிகளின் வெற்றியாளன் என்கிற அளவிற்கு திறமையாளன் என்பது உணராமல் அவனோடு நானும் களத்தில் ஓடினேன்.

ஓடினேன் ஓடினேன் ஓடி முடித்தேன்.

அதற்குள் ராஜசேகர் சிட்டாய் பறந்து முதல் இடத்தைப் பெற்றிருந்தான்.

அடுத்து சில நிமிடங்களில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயம். அதிலும் ராஜசேகரும் ஓடுகிறான்.

அந்த மைதானத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஓடுதடத்தில் சுமாராக 3 முறை சுற்றி முடிக்க வேண்டும் என்பதாக ஞாபகம். ஆரம்பத்தில் நிதானமாக ஓடிக்கொண்டிருந்தான் ராஜசேகர். நானும் அவனை அனுசரித்தே பதட்டமின்றி ஓடிக் கொண்டிருந்தேன்.

இரண்டாவது சுற்றில் ஓடிக் கொண்டிருக்கும் தருணம் ராஜசேகர் கொஞ்சம் வேகம் எடுத்தான்...

அவ்வளவு தான் தெரியும், நான் 2வது சுற்று ஓடி முடிக்கும் முன்பே அவன் என்னை ஓவர் டேக் செய்து 3வது சுற்றுக்குள் வந்து விட்டான்; இன்னும் சில ஓட்டப்பந்தய வீரர்களும் விரைந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

துணையாக ஒன்று இரண்டு பேர் மெல்லமாய் ஓடுகிறார்கள். எனக்கு பின்னால் கூட ஒரு நண்பன் வந்து கொண்டிருந்தான்.

அந்தப் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஒலிபெருக்கியில் எங்கள் பெயர்களை சொல்லி சொல்லி ஓர் அறிவிப்பை உரக்கச் சொன்னார்.

அதாவது, எங்கள் இருவர் பெயரையும் குறிப்பிட்டு, ஒரு ஓட்டப்பந்தயத்தில் ஓரிருவர் ஏன் மூவர் கூட வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். எல்லோருமாய் அந்த ஒரு பந்தயத்தில் வெற்றி பெற வாய்ப்பில்லை. ஆனால், பந்தயத்தில், ஓடிக் கொண்டிருக்கும் அனைவரும் களத்தில் இலக்காய் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை ஓடி முடிப்பது தான் அழகு என்று சொன்னார்.

என் மனதில் திக் திக் என்றது.

ராஜசேகர் ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்து முதலிடத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டும் விட்டது. நானும் என் சகாவும் மெல்லமாய் நாக்குத் தள்ள 3வது ரவுண்டை அடி அடியாய் எடுத்து வைத்து கடக்கின்றோம். கிட்டத்தட்ட எல்லோருமே ஓடி முடித்து அடுத்த விளையாட்டுப் போட்டித்திடலுக்கு போன பின்பும் நாங்கள் தனியாக ஓடிக் கொண்டிருந்தோம்.

எப்படியோ 800 மீட்டர் ஓட்டத்தை நிறைவு செய்தேன்.

ஆனாலும், உடற்பயிற்சி ஆசிரியரின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்து விளையாட்டுப் போட்டியின் சத்தியமான ஒழுங்கை காப்பாற்றிக் கொண்டேன் என்பதில் இன்றளவும் எனக்கு மகிழ்ச்சியே!

நண்பன் ராஜசேகரன் அந்த ஆண்டு 100 மீட்டர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், ஹை ஜம்ப், லாங் ஜம்ப் என் பல போட்டிகளில் வென்று சாம்பியனாகி இருந்தது கூடுதல் மகிழ்ச்சி!

"தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படி" என்று மனதிற்குள் நான் முழங்கிக் கொண்டாலும் அதன் பிறகு எந்த விளையாட்டுப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல்!

   நண்பன் ராஜசேகர்


07 மே, 2022

கீதாஞ்சலி நாயகன் தாகூர்




குருதேவ் என்றும் அழைக்கப்படும் ரவீந்திரநாத் தாகூர், மே 7, 1861 முதல் ஆகஸ்ட் 7, 1941 வரை வாழ்ந்த ஒரு முக்கிய இந்திய கவிஞர், எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் இசையமைப்பாளர் ஆவார். அவர் பெங்காலி இலக்கியத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராகவும் இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க கலாச்சார அடையாளமாகவும் பரவலாகக் கருதப்படுகிறார். இலக்கியம், இசை மற்றும் கலை ஆகியவற்றில் தாகூரின் பங்களிப்புகள் அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன, 1913 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற முதல் ஐரோப்பியர் அல்லாதவர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

ரவீந்திரநாத் தாகூர் இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள ஜோராசங்கோவில் ஒரு முக்கிய பெங்காலி குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை, தேபேந்திரநாத் தாகூர், ஒரு தத்துவவாதி மற்றும் மத சீர்திருத்தவாதி, மற்றும் அவரது தாயார், சாரதா தேவி, இளம் ரவீந்திரநாத் மீது ஆழ்ந்த செல்வாக்கைக் கொண்டிருந்த ஒரு பக்தியுள்ள பெண். அவர் பதினான்கு குழந்தைகளில் இளையவர் மற்றும் இலக்கிய மற்றும் கலாச்சார வளமான சூழலில் வளர்க்கப்பட்டார்.

தாகூரின் கல்வி வேறுபட்டது மற்றும் வழக்கத்திற்கு மாறானது. அவர் ஆரம்பத்தில் வீட்டுப் பள்ளிப்படிப்பைப் பெற்றார், பின்னர் குறுகிய காலத்திற்கு லண்டன் பல்கலைக்கழக கல்லூரி உட்பட பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்றார். இருப்பினும், தாகூர் இலக்கியம் மற்றும் கலைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார், மேலும் அவர் சிறு வயதிலிருந்தே கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார்.

இலக்கிய வாழ்க்கை:

ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் பயணம் 1878 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அவரது முதல் கவிதைப் புத்தகமான "கபி கஹினி" (ஒரு கவிஞரின் கதை) மூலம் தொடங்கியது. அவரது ஆரம்பகால படைப்புகள் ரொமாண்டிசிசத்தால் குறிக்கப்பட்டன, இயற்கையின் அழகையும் அன்பையும் சித்தரித்தன. அவரது கவிதைத் தொகுப்பு, "மானசி" (1890), ஆழமான தத்துவக் கருப்பொருள்கள் மற்றும் மிகவும் முதிர்ந்த எழுத்து நடையை நோக்கி ஒரு மாற்றத்தைக் குறித்தது.

தாகூரின் மிக முக்கியமான இலக்கிய சாதனைகளில் ஒன்று "கீதாஞ்சலி" (பாடல் வழங்குதல்) என்ற கவிதைத் தொகுப்பாகும், இது அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்தப் படைப்பு அவருக்கு சர்வதேசப் புகழைக் கொண்டுவந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது. "கீதாஞ்சலி" ஆன்மிக மற்றும் பக்தி கவிதைகளைக் கொண்டுள்ளது, இது தாகூரின் வாழ்க்கை, கடவுள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய ஆழமான எண்ணங்களை பிரதிபலிக்கிறது.

தாகூர் ஒரு கவிஞர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நாடக ஆசிரியர், நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளராகவும் இருந்தார். இந்த வகைகளில் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் சில "சித்ரா" மற்றும் "தி போஸ்ட் ஆபிஸ்" நாடகங்கள், "கோரா" மற்றும் "கரே-பைரே" (வீடு மற்றும் உலகம்) நாவல்கள் மற்றும் தேசியவாதம், கல்வி மற்றும் சமூகப் பிரச்சனைகள் உட்பட பல்வேறு தலைப்புகளில் பல கட்டுரைகள் அடங்கும்.

கலை வெளிப்பாடு:

அவரது இலக்கிய சாதனைகள் தவிர, ரவீந்திரநாத் தாகூர் ஒரு பல்துறை கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இந்தியாவின் தேசிய கீதமான "ஜன கன மன" மற்றும் வங்காளதேசத்தின் தேசிய கீதமான "அமர் ஷோனர் பங்களா" ஆகியவற்றிற்கான மெல்லிசையை எழுதியவர். இசைக்கு அவர் செய்த பங்களிப்புகள், குறிப்பாக ரவீந்திர சங்கீத் (தாகூர் பாடல்கள்), மகத்தானவை மற்றும் தொடர்ந்து பெங்காலி கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. அவர் சாந்திநிகேதனில் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார், அங்கு அவர் கலை, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை கல்வியில் ஒருங்கிணைக்க முயன்றார்.

சமூக மற்றும் தத்துவ பார்வைகள்:

தாகூர் ஒரு இலக்கியவாதி மட்டுமல்ல, ஒரு செல்வாக்கு மிக்க சிந்தனையாளர் மற்றும் தத்துவவாதி. அவர் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் பல அம்சங்களை விமர்சித்தார் மற்றும் சுதேசி இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார், சுயசார்பை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட்டார். இருப்பினும், அவர் குறுகிய தேசியவாதத்திற்கு எதிராக நின்று மனித விழுமியங்களின் உலகளாவிய தன்மையை நம்பினார்.

அவரது தத்துவம், பெரும்பாலும் "தாகூரியம்" என்று குறிப்பிடப்படுகிறது, சுதந்திரம், படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கத்தையும், அனைத்து உயிரினங்களின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் அவர் நம்பினார். கல்வி குறித்த தாகூரின் பார்வையானது படைப்பாற்றல் மற்றும் கலை வெளிப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து ஒரு நபரின் முழுமையான வளர்ச்சியை மையமாகக் கொண்டது.

மரபு:

ரவீந்திரநாத் தாகூரின் பாரம்பரியம் இந்தியாவிலும் உலகெங்கிலும் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. அவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்களின் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியுள்ளன. இந்திய இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் மீது தாகூரின் செல்வாக்கு மகத்தானது, கல்வி, தேசியவாதம் மற்றும் மனிதநேயம் பற்றிய அவரது கருத்துக்கள் இன்றுவரை பொருத்தமானவை.

முடிவில், ரவீந்திரநாத் தாகூர் ஒரு பன்முக மேதை ஆவார், அவருடைய பங்களிப்புகள் இலக்கியம், இசை மற்றும் தத்துவம் ஆகியவற்றில் இந்திய மற்றும் உலகளாவிய கலாச்சாரத்தில் ஒரு அழியாத முத்திரையை ஏற்படுத்தியது. அவரது படைப்புகள் மக்களுடன் தொடர்ந்து எதிரொலிக்கின்றன, மேலும் அவர் மனித உணர்வுகளின் ஆழத்தையும் வாழ்க்கையின் மர்மங்களையும் ஆராய்வோருக்கு உத்வேகத்தின் நித்திய ஆதாரமாக இருக்கிறார்

27 ஏப்ரல், 2022

மனிதமும் மருத்துவமும்



நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றியும் தஞ்சை அரசு மருத்துவமனை பற்றியும் பேசியதன் விளைவாக சமூக வலைத் தளங்களில் கடும் விவாதங்கள் நடந்து, ஆதரவும் எதிர்ப்புமாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்தப் பதிவு அவர் பேசியது சரியா? தவறா என்பது பற்றியது அல்ல. அதைப் பற்றி நிறைய விவாதப் பொருளையும் இங்கே நான் பகிரவில்லை.

நான் சொல்ல வருவது வேறு செய்தி.

இந்த நேரத்தில் எனக்கு தஞ்சை இராசா மிராசுதார் மருத்துவமனை பற்றிய நினைவலைகள் வந்து போயின.
1990 ஆம் ஆண்டு. அப்போது தஞ்சாவூரில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.

அந்த சமயம் என் மனைவிக்கு பிரசவக்காலம்.

அதற்கு முந்தைய குழந்தை ஒன்று சிசேரியன் மூலம் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது இறந்துவிட்ட நிலையில் சீக்கிரமே அடுத்த குழந்தை.

எங்கள் இருவருக்குமே கொஞ்சம் பயம். இந்த முறையும் சுகப்பிரசவம் நிகழ வாய்ப்பு இல்லை என்றும், சிசேரியன் தான் ஒரே வழி என்ற நிலையில் பதட்டமான சூழ்நிலையில் என் நண்பர்கள் சிலர், "பேசாமல் அரசு மருத்துவமனைக்கு போய் விடு, அங்கே இப்போது நல்ல மருத்துவர்கள்இருக்கிறார்கள். பணத்தையும் அதிகம் இழக்கத் தேவையிருக்காது" என்றார்கள்.

பிரசவ காலம் நெருங்கியது. அப்போது டாக்டர்.ஜெகன்மோகினி என்ற சீனியர் ஒருவர் தான் பிரசவப்பிரிவின் தலைமை மருத்துவர்.
அவரை நம்பி அங்கே போனோம்.

என் நண்பர்கள் பலரும், " நீ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவதால், அலுவலகம் மூலம் சிபாரிசுடன் போய் பார்" என்றார்கள். ஆனால், இதற்கெல்லாம் சிபாரிசை விரும்பாத நான், நேரடியாக போய் அட்மிஷன் போட்டு விட்டேன்.

அப்போது பணியிலிருந்த டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, 15 நாட்கள் தொடர் கவனிப்பில் இருக்க வேண்டுமென்று தங்க வைத்து விட்டார்கள்.

தினசரி, நான் என் மனைவிக்கு சாப்பாடு கொடுத்திட போக வர இருந்தேன். பல நேரங்களில் நானும் சில சமயங்களில் அங்கேயே போய் மனைவியோடு சேர்ந்து சாப்பிடுவேன்.

அருகே, பெரிய கோவில் வாயிலை ஒட்டிய வாசலுக்கு அருகில் முனியாண்டவர் கோவில் நிழலில் சிறிது நேரம் பொழுது போகும்.

அப்போது, அந்த மகளிர் குழந்தைகள் நலப் பிரிவில் டாக்டர்.ஜெகன்மோகினி அவர்கள் தலைமை மருத்துவர்.  அவர் கண்டிப்பான மருத்துவர் என்பதைத் தாண்டி, நிர்வாகத்தில் மிகவும் சிரத்தையானவர். மருத்துவமனை வளாகமே நன்கு சுத்தமாக இருக்கும். கண்டபடிக்கு கண்ட நேரத்தில் பார்வையாளர்கள் உள்ளே வரக் கூடாது போன்ற கெடுபிடிகளும் உண்டு. ஆனால் சிகிச்சை சிறப்பாக இருப்பதாக மக்களிடையே நம்பிக்கை இருந்த வந்தது.

மாவட்டத்தின் பல ஊர்களிலிருந்தும் பிரசவத்திற்காக மக்கள் வருவார்கள். சிறப்பான மருத்துவத்தை சிலாகித்து பேசுவார்கள்.
ஆபரேஷன் தேதி குறிக்கப்பட்டது.

முதல் நாளே, என் அதிகாரியை பார்த்து விடுப்பு விண்ணப்பம் தர போனேன். அவர் சொன்னார், "நான் சிபாரிசு கடிதம் தருகிறேன். அதை டாக்டர்.ஜெகன்மோகினி அவர்களிடம் கொண்டு போய் கொடு. சிறப்பாக கவனிப்பார்கள்" என்றார். நானோ, " வேண்டாம் சார். பொதுவாகவே நன்றாக பார்க்கிறார்கள். தேவையென்றால், உங்கள் உதவியை நாடுகிறேன்" என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

அந்த அதிகாரி என் மீது தனிப்பிரியமும் நன்மதிப்பும் கொண்டிருந்தமையால், ஆபரேஷன் அன்று அலுலகத்தில் முக்கிய பணியாளர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தார். எனக்குத் தெரியாமலே மருத்துவமனைக்குள் சென்று டாக்டரை சந்தித்து விஷயத்தை சொல்லியுள்ளார்கள்.

அவரோ, அதற்கு நான் ஒன்றும் அரசாங்க அலுவலக ஊழியர் மனைவி என்றால் ஒரு மாதிரியும், சாதாரண தொழிலாளி வீட்டு பெண்மணி என்றால் ஒருமாதிரி வைத்தியம் பார்ப்பவர் அல்ல, நீங்கள் போகலாம். என்று கூறிவிட்டார்.

அடுத்த அரை மணிநேரத்தில் என் இரண்டாவது மகன் பிறந்தான். பிரசவத்திற்கு பிறகு 1 வாரம். நல்ல தொடர் கவனிப்பு. நல்ல மருந்து மாத்திரைகள் என்று எந்த குறையும் இல்லை என்றே சொல்லலாம். 

அதன் பிறகு 6 வருடங்கள் கழித்து என் அம்மாவுக்கு அதே அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை ஆபரேஷன். அப்போது, டாக்டர் கோமதி அவர்கள். அத்தனை சிறப்பான மருத்துவம்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால்....

மருத்துவனைகள் அந்த காலத்தில் மருத்துவர்களின் கட்டுப்பாட்டிலும், சிறப்பான கவனிப்பிலுமாக அந்த மருத்துவமனைக்கே ஒட்டுமொத்த நல்ல பேர் கிடைத்து. HOD-க்கள் சிறப்பாக இருந்தால், அந்த பிரிவு துறையில் சிறப்பான மருத்துவம் கிடைக்கும். Dean-நல்ல நிர்வாகியாக இருந்தால், ஒட்டு மொத்த மருத்துவ மனையே சிறப்பானதாக இருக்கும்.

நிர்வாகம் செய்யக்கூடியவர் மனசாட்சிப்படி, நேர்மையாகவும், சிறப்பாகவும் செயல்பட்டாலே போதும் அதன் பயனை மக்கள் அனுபவிப்பர்.

அப்போது, இதை சுட்டிக்காட்ட ஒரு செலிபிரட்டியோ, ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியரோ தேவையில்லை என்பதைத் தான் வலியுறுத்துகிறேன்.

இன்றளவும் அந்த இரு மருத்துவர்களை நான் நன்றியோடு நினைத்துப் பார்ப்பதுண்டு.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.
ஜோதிகா அவர்கள் சொன்னதிலும் தவறேதுமில்லை.

இப்போது பெருத்துக் கிடக்கும் மக்கள் தொகையில், ஏழை எளிய மக்கள் அதிகம் பேர் அரசு மருத்துவமனைகளைத் தான் நாடி வருகின்றனர்.

அதில் கார்ப்பரேட் மாஃபியாக்களால் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் தனியார் மருத்துவமனைகளின் அடாவடியை தாங்க முடியாமல் அவர்கள் நாடிவரும் அரசாங்க மருத்துவமனைகளை நன்கு பராமரிப்பதோடு நல்ல மருத்துவத்தையும் தர வேண்டும் தானே?

மதம் சார்ந்த வழிபாட்டுத் தளங்களை விடவும் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை நன்கு செலவு செய்து சிறப்புடன் பராமரிக்க வேண்டும் கேட்பது நல்ல சமூக நலன் நிறைந்த கோரிக்கையே.

28 ஜனவரி, 2022

தினமும் எண்ணெய் கவனி



எண்ணெய் ஆட்டும் செக்குகளையெல்லாம் இனி வரும் சந்ததியினர் பார்க்க வாய்ப்பு கிட்டுமா என்பது சந்தேகமே...

ஐந்தாறு வருடங்களுக்கு பிறகு, என் இல்லாளுடன் எண்ணெய் அரவை மில்லில் (செக்கு) தேங்காய் அரைக்க வந்து இருந்தேன். முன்பொரு காலத்தில் வீட்டில் இருக்கும் 2, 3 தென்னை மரங்களில் கிடைக்கும் தேங்காய்களை கொண்டு ஒரு வருடத்திற்கான எங்கள் தேவைக்கான தேங்காய்எண்ணெய் ஆட்டி எடுத்து வைத்துக்கொள்வது கொள்வது வழக்கம்.

அதே போல் கடையில் எள் வாங்கி நல்லெண்ணெய் ஆட்டி ஒரு வருடத்திற்கு வைத்துக் கொண்டதும் உண்டு.

பணி நிமித்தமாக சென்னைக்கு போனபிறகு இதெல்லாம் இயலாமல் போனது. பொதுவாக, மனிதனுக்கு எண்ணெய் நுகர்வென்பது மிகவும் முக்கியமான வாழ்க்கை முறையாகிவிட்டது. எங்கள் வீட்டில் எண்ணெய் உபயோகத்தை மிகவும் கவனத்துடன் செய்வதுண்டு. தாளிதம் வறுவல் பொரியல் என்று எண்ணெய் தொடர்புடைய சமையல்கள் அனைத்திலும் வழக்கத்திற்கும் குறைவாகவே  பயன்படுத்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தாள் என் இல்லாள்.

இப்போதெல்லாம் பெரிய கம்பெனிகள் கார்ப்பரேட்டுகள் வகைவகையாய் எண்ணெய்களை வியாபாரத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

எது உடலுக்கு நல்லது எது தீங்கானது இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாமா கூடாதா என்றெல்லாம் குழம்பியபடியே விவாதத்தில் மூழ்கிப் போய்க் கொண்டிருக்கிறது காலம். பொதுவாக, நம் இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்துவதில் எண்ணெய் பொருள்களுக்கு பங்குண்டு என்ற விழிப்புணர்வு மட்டும் நமக்கு வந்துவிட்டது என்னவோ உண்மை.

ஆனால், எண்ணெய் குறித்த பயமும் புரிதலற்ற போக்கும் இங்கே நம்மை குழப்பி கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு எண்ணொய் தயாரிப்பு நிறுவனங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நம்மை பீதி
அடைய செய்து வைத்திருக்கிறார்கள்...

யாரை நம்புவது யாரை புறக்கணிப்பது என்பதில் கூட நமக்குள் நம்பகத் தன்மை இல்லை என்பதே உண்மை. பெரும் வியாபார உலகம் என்று ஆகிவிட்ட நிலையில் கிடைக்கின்ற கண்ட கண்ட எண்ணெய் வகைகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம்.

சென்னை போன்ற பரபரப்பு மிகுந்த நகரங்களில் மக்கள் விளம்பர உத்திகளால் கவரப்பட்டு அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதுபோக கண்ட கண்ட எண்ணைய்களில் உணவு தயார் செய்யும் ஹோட்டல்களில்
உணவு வாங்கி சாப்பிட்டு காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

சமீபகாலமாக மரச்செக்கு மரச்செக்கு என்று சொல்லிக்கொண்டு ஒரு வியாபாரம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.

சென்னையில், நானும் கவனித்தேன் அந்த மரச்செக்குகளில் பகல் நேரத்தில் எண்ணெய் ஆட்டுவதை ஒருமுறை கூட கண்ணால் பார்க்காத நிலையில் பாட்டில் பாட்டிலாக செக்கு எண்ணெய் செக்கு எண்ணெய் என்று சொல்லி விற்றுக் கொண்டிருப்பதை கண்ணுற்றேன்.

இது என்ன மாயமோ மர்மமோ என்றுதான் சந்தேகிக்கத் தோன்றுகிறது...

மக்கள் எல்லோரும் எல்லோரும் உறங்கிய பின் அர்த்த ராத்திரியில், இந்த மரச் செக்குகளில் எண்ணெய் ஆட்டுகிறார்கள் போலும். ஊரகப் பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இப்படியான ஆயில் மில்கள் (செக்குகள்) இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைகளும் இன்னும் எத்தனை காலம் இயங்குவதற்கு கார்ப்பரேட்டுகளின் பெரிய எண்ணெய் நிறுவன முதலைகளும் அனுமதிக்குமோ தெரியவில்லை. மனித உடலின் செரிமான மண்டலத்திற்கும் இதயத்தின் ரத்தக் குழாய்களுக்கும் ஆகாத எண்ணெய்களால் இதய நோய்களும் வயிற்று பிரச்சினைகளும் வர, இன்னொரு பக்கம் யார் யாரோ பண மூட்டை கட்டிக்கொண்டு பயனடைந்து போகிறார்கள்.

ஆனால், விழிப்பு இல்லாத இந்த பொதுஜனம் மாய வலையில் விழுந்து நாளுக்கு நாள் உடல்நலத்தையும் பணத்தையும் இழந்து கொண்டே போகிறார்கள்.!!

எண்ணெய் விஷயத்தில் தினசரி கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது. 

25 ஜனவரி, 2022

வளமும் விவசாயமும்

1990-கள்...


நான் திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் திருக்காட்டுப்பள்ளியை ஒட்டிய சில கிராமங்களில் களப்பணி புரிந்தேன்.

தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் கண்டியூரில் இருந்து இடதுபுறமாக திரும்பினால் திருக்காட்டுப்பள்ளி சாலை. காலையில் தஞ்சாவூரில் இருந்து பேருந்தில் புறப்பட்டு கண்டியூர் அடுத்து நடுக்காவேரி தாண்டினால் குடமுருட்டி ஆற்றின் கரை ஒட்டியே வரும்

கருப்பூர் என்ற சிற்றூரில் இறங்கி அங்கே ஒரு சைக்கிள் கடையில் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு வரகூர் கடம்பங்குடி கழுமங்கலம் அம்மையகரம் அடஞ்சூர் என்று கிராமங்களுக்கு சுற்றிவிட்டு திருக்காட்டுப்பள்ளி வந்து அங்கு ஒரு கடையில் சாப்பிட்டுவிட்டு திரும்பவும் மைக்கேல்பட்டி வழியாக கருப்பூர் வந்து சைக்கிளை விட்டு விட்டு மீண்டும் பஸ் ஏறி ஊருக்கு வருவதுண்டு.
அந்தப் பகுதியே ஒட்டுமொத்தமாய் பச்சைப் பசேலென பரந்து விரிந்த எழில் மிகுந்த வளம் மிக்க கிராமங்கள்.

அருகருகே காவிரியும் குடமுருட்டியும் ஓடி சிற்றூர்களை செழிக்கச் செய்யும் பகுதி. இந்த இரண்டு ஆற்றின் நடுவே கூட ஒரு கிராமம் இருக்கிறது. அதன் பெயர் வளப்பக்குடி. பெயருக்கு ஏற்ற மாதிரி எந்த நாளும் வளப்பமாக திகழும் ஊர் அது. 365 நாளும் விவசாயம் நடைபெறும் ஒரு அழகிய கிராமம் அது.

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருச்சி சாலையில் பயணித்தால் கல்லணை.

திருக்காட்டுப்பள்ளி ஆகட்டும் மைக்கேல் பட்டி ஆகட்டும் அல்லது, அதனை சுற்றி அமைந்துள்ள அத்தனை கிராமங்கள் ஆகட்டும் எல்லாம் வளம்மிக்க அமைதியான அழகான சிற்றூர்கள்...

எல்லா மக்களும்
எல்லா நாட்களிலும்
கடும் உழைப்பாளிகள்.

பின்குறிப்பு:-
இப்போது ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கும்

மதமாற்ற பிரச்சினைக்கும் இந்தப் பதிவிற்கும் எந்த தொடர்பும் இல்லையாக்கும்.