1970-கள்...
அப்போது எனக்கு ஏழெட்டு வயதுக்கும் மேல் இருக்கும்.
முழுப் பரீட்சை முடிந்து விடுமுறையில் அம்மா என்னை பட்டுக்கோட்டையை அருகே ஒரு கிராமத்திலுள்ள என் மாமன் வீட்டிற்கு அழைத்துச் செல்வாள்.
அப்போது மதுவிலக்கு இருந்ததா என்பது என் அறிவிற்கு எட்டவில்லை.
சாராயக்கடைகள் இருந்தமை பற்றி என் நினைவில் இல்லை.
நான் பார்த்ததுமில்லை.
மொடாக் குடிகாரரான என் அப்பா கள்ளுக்கடையில் குடித்துவிட்டு வருவதை பற்றி என் அம்மா சொல்லி இருக்கிறார்.
மாமா பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தார். வீட்டின் எதிரிலேயே பள்ளிக்கூடம்.
மாமா வீட்டின் பக்கத்தில் ஒரு வயதான பாட்டி குடி இருந்தார்.
அந்த வீட்டில் சாராயம் காய்ச்சுவதைப் பற்றி பேசிக் கொண்டது நினைவில் இருக்கிறது.
ஒரு நாள் காலை நேரம்... அந்த சாலையில் இரண்டு போலீஸ்காரர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
முன்பக்கம் கத்தி போல் விறைப்பாய் நீண்டபடியான காக்கிச் டவுசர்! தலையில் சிவப்பும் நீலமும் கலந்த கூர் வைத்த தொப்பி. கையில் நான்கடி நீளத்தில் பிரம்பு.
முழங்காலை தொடும் அளவிற்கு காக்கி நிற சாக்ஸ், காலில் யானைக்கால் சைசுக்கு ஷூ அணிந்தபடி அவர்கள் இருவரும் நடந்து வந்ததை பார்த்த என் மாமா எங்கள் காதுகளில் கிசுகிசுத்தார், "போலீஸ்காரங்க சாராயக்கேஸ் பிடிக்க வந்திருக்காங்க"
இரண்டு போலீஸ்காரரும் நேராக அந்த பக்கத்து வீட்டு பாட்டி வீட்டுக்குள் நுழைந்தார்கள். நானும் என் மைத்துனனும் ஏதோ அது பற்றி சத்தமாக பேச என் மாமாவும் அத்தையும் எங்கள் வாயை பொத்தினார்கள்...
கொஞ்ச நேரத்திலேயே பாட்டி வீட்டிற்குள் இருந்து கூக்குரல் கேட்டது!
என்னவோ பாட்டி சத்தமாய் பேசினாள்.
போலீஸ்காரகள் வீட்டின் உள்ளே இருந்தபடி பானைகளைத் தூக்கி வெளியே வீசினார்கள்.
உள்ளே நடந்தது என்னவென்றால் பாட்டி பரண்மீது வைத்திருந்த விதை நெல் பானையை ஒரு போலீஸ்காரர் தன் பிரம்பால் சாராய ஊறலாக இருக்குமோ என்று ஓங்கி குத்தி இருக்கிறார். விதைநெல் முழுவதும் பொலபொலவென அந்த போலீஸ்காரர் தலை மீது கொட்டியது.
போலீஸ்காரருக்கு என்ன ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை. இவள் சாராயம் காய்ச்சி விக்கிறவ தானே? ஊறலை எங்கு தான் வைத்திருப்பாள்? என்று ஆத்திரத்தோடு அங்கு இருந்த எல்லா பானைகளையும் உடைத்து வெளியே தூக்கி எறிந்தார்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அவரது மகனும் பேரனும் அங்கு ஓடி வந்தார்கள். இருவரும் போலீஸ்காரர்களோடு சண்டையிட்டார்கள்.
"பாட்டி இப்போது சாராயம் காய்ச்சுவது இல்லை, ஏன் அவரை தொந்தரவு செய்கிறீர்கள்?" என்று சத்தம் போட்டார்கள்.
ஆனால், போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் விட்டபாடில்லை.
வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள்,
கொள்ளைப்புறத்தே கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு இடத்தில் காலடியில் அமுங்குவது போல் தெரிந்திருக்கிறது. உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்த்தால் உள்ளே சாராய ஊறல் பானைகள்.
உடனே அந்தக் காவலர்கள் பாட்டியின் பேரனையும் பையனையும் பிரம்பால் ஆளுக்கு இரண்டு சாத்து சாத்தினார்கள்.
அவர்கள் வலியால் துடித்துக் கத்தினார்கள். வாயடைத்துப் போய் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கொண்டார்கள்.
சாராய ஊறலை சாலையோரத்தில் கொட்டி அதன் மீது மண்ணையும் குப்பைகளையும் அள்ளிப் போட்டுவிட்டு, பானையை மட்டும் எடுத்துக் கொண்டார்கள்.
அந்தப் பானை தான் அவர் சாராயம் காய்ச்சியதற்கு தடய சாட்சியாக நீதிமன்றத்தில் சொல்வார்கள் போலும்.
அப்போதெல்லாம் காவல் நிலையங்களில் இப்போது வழக்குகளில் சிக்கிய வாகனங்களை நிறுத்தி இருப்பது போல், சாராய ஊறல் பானைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
பக்கத்து வீடான என் மாமாவிடம் போலீஸ்காரர்கள் வந்து "இந்த வீட்டில் இந்த பாட்டி மட்டும்தான் குடி இருக்கிறாரா அவரது மகன் பேரன்களோடு சேர்ந்து இருக்கிறார்களா?" என்று கேட்டு ஊர்ஜிதம் செய்து கொண்டார்கள். என் மாமா "பாட்டி மட்டும்தான் இங்கு இருக்கிறார், அவரது பையன் மருமகள் மற்றும் பேரன் தனியாக இருக்கிறார்கள்" என்று சொன்னதும் அவர் பையனையும் பேரனையும் விட்டுவிட்டு பாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள்.
ஊழல் போடப்பட்டிருந்த பானையை பாட்டி தலையின் மீது தூக்கி வைத்து "இதை சுமந்து கொண்டே ஸ்டேஷனுக்கு வா" என்று நடக்க வைத்தே அழைத்துச் சென்றார்கள்.
இந்தக் காட்சி எனக்கு அப்படியே நினைவில் இருக்கிறது.
அதன் பிறகு காலங்கள் உருண்டோட...
என் அப்பா தஞ்சாவூரில் சாராயக் குடியால் இறந்து மடிந்த பிறகு 1980களில் என் மாமாவின் ஆதரவோடு இந்த ஊருக்கே புலம் பெயர்ந்தேன்!
அப்போதும் அந்த ஊரில் சாராயம் காய்ச்சும் வழக்கம் இருந்ததைக் கண்ணுற்றேன்.
நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர்ச்சாரியில் 16, 17 வயது பையன்கள் உட்பட பலரும் சாராய ஊறல் போட்டு வீட்டிலேயே காய்ச்சி அங்கேயே விற்பனை செய்வார்கள்.
போலீஸ் நிலையத்திலிருந்து காவலர்கள் வரும்போது வழக்கிற்காக சுழற்சி முறையில் மாதம் ஒரு முறை ஒவ்வொருவராக அழைத்துச் செல்வார்கள்.
அப்போதெல்லாம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் ஒரு வாரத்தில் வெளியே வருவார்கள். சில பேர் அபராதம் கட்டி வெளியே வந்ததாய் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிறையில் இருந்து வந்த பிறகு மீண்டும் அதே சாராயம் காய்ச்சும் வேலை தான்.
இந்த முறை காவல்துறையினர் வரும்போது வேறு இருவரை வழக்கு எண்ணிக்கைக்காக பிடித்துச் செல்வார்கள்!
இது பற்றி எல்லாம் ஊரில் யாரும் கவலைப்பட்டுக் கொண்டதாக எனக்கு நினைவில் இல்லை.
குடியால் கெட்டழிந்த குடும்பமாகையால் நான் வருத்தப்பட்டு இருக்கிறேன்; ஆனால் என்னால் எதுவும் எதிர்வினை ஆற்ற இயலாத சூழல்.
காரணம், அந்த ஊரில் நூற்றுக்கு 90 பேர் குடிக்கிற ஆட்கள். சாதாரணமாக பக்கத்தில் நின்றாலே பேசும் போது சாராய வாடை 'குப்'பென்று வீசும்.
காலையில் வெள்ளையும் சொள்ளையுமாக நல்லவர் மாதிரி பேசிக் கொண்டிருப்பவர் மாலையில் ஏதாவது வாய்க்கால் ஓரத்தில் போதையில் சகதியோடு சகதியாய் புரண்டு கிடப்பார்.
இப்படி சாராயப் பிரியர்கள் ஊருக்குள் மந்தை மந்தையாய் பெருகிக் கிடக்க காய்ச்சி விற்பவர்களுக்கு கொண்டாட்டம் தானே?
காவல்துறையினர் எளிதில் பிடித்து விடாமல் இருக்க ஊர்க் கடைசியில் காட்டாற்றின் கரையில் சாராயம் காய்ச்சுவதை நேரில் கண்டிருக்கிறேன்.
போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்கு அவர்கள் ஒரு உத்தி வைத்திருந்தார்கள்.
எங்கள் ஊர் அதிராம்பட்டினம் காவல் சரகத்தில் வரும். அங்கிருந்து காவலர்கள் தேடி வரும் போது எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு வேறொரு காவல் நிலைய எல்லைக்குள் ஓடி விடுவார்களாம்.
அதனால் அவர்களைப் பிடிக்க முடியாது போகுமாம்.
அதை, "போலீசுக்கு டிமிக்கி கொடுத்தோம்" என பெருமையோடு பேசிக்கொள்வார்கள் அந்த சாராய விற்பன்னர்கள்!
ஒரு கட்டத்தில் சாராயம் விற்பவர்களை சில காவல்துறை அதிகாரிகள் கடுமையாக ட்ரீட்மென்ட் செய்து பலரை ஒழித்துக் கட்டியும் சிலரை திருத்தியும் விட்டிருக்கிறார்கள்.
அவர்கள் மறுவாழ்வு பெற வங்கியில் லோன் வாங்கி கொடுத்த காவல்துறை அதிகாரிகளும் உண்டு.
அந்த கிராமத்தில் பஞ்சாயத்தார் மற்றும் நற்பணி மன்ற இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சாராயம் காய்ச்சுபவர்களை கண்டித்து அத்தொழிலில் இருந்து விடுபடச் செய்தார்கள்.
பிறகு அரசால் ஏலம் விடப்பட்ட அதிகாரப்பூர்வ சாராயக்கடைகள் பெருகப் பெருக கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் எண்ணிக்கை என்னவோ குறைந்தே போனது.
பிறகு சினிமாவில் சாராயம் காய்ச்சுபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து எம்எல்ஏ ஆனவர்கள் கல்வித்தந்தை ஆனார்கள் என்றெல்லாம் காட்டப்பட்டது வேறு கதை.
ஒன்றிரண்டு சாராய மன்னர்கள் பிற்காலத்தில் பெரும் அதிகார பதவிகளில் கோலொச்சியதையும் நாம் கண்டது உண்மையிலும் உண்மையே.
தெருவுக்குத் தெரு அரசாங்கமே சாராயக்கடைகளைத் திறந்து வைத்திருக்க, இன்னமும் கள்ளச்சாராயம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரங்கேறிக் கொண்டிருப்பது பயமாகத்தான் இருக்கிறது.
டாஸ்மாக்கில் விற்கப்படும் சாராயத்தின் தரம் குறித்து நிறைய விவாதங்கள் ஒருபுறம்.
சாராயம் விற்று வரும் பணத்தில் அரசாங்கம் நடத்த பெருமளவில் உதவுகிறது என்று ஒரு கூற்று மறுபுறம்.
இடையில் கள்ளச்சாராயம் என்ற ஒரு விஷயத்தை கண்டு பதறும் அரசாங்கம்.
ஆண்களும் பெண்களுமாய் சேர்ந்து குடிக்கும் அளவிற்கு பக்குவப்பட்டு போன நம் சமூகம்.
குடியால் உடலளவிலும் மனதளவிலும்
எல்லா பாதிப்பிற்கும் உள்ளாகி கடைசியில் மரணிப்பதோடு ஒரு பாவமும் அறியாத குடும்பத்தை நிலைகுலையச் செய்திடும் இந்த நிலைமைக்கு யார் பொறுப்பாவது?