Powered By Blogger

23 ஆகஸ்ட், 2023

நிலவில் இந்தியா

 

நம் நம்பிக்கை வீணாகவில்லை. நிலவில் இந்தியா கால் பதித்தது. சந்திரயான் 3 இன்று 23/8/23 மாலை சரியாக 6 04க்கு திட்டமிட்டபடி நிலவில் இறங்கியது. 




சுதந்திரம் பெற்ற பின் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக
விதை போட்டும்
இந்தியா உலக நாடுகளுக்கு நிகராக
விருட்சமாக உயர
ஆக்கப் பூர்வத் தளங்களை
முன்னெடுத்து வைத்தவர்
பண்டித ஜவஹர்லால் நேரு!
அறிவியலில் முன்னேற்றம் பெறவும்
உலக அரங்கில்
இந்தியா தலை நிமிரவும்
வித்திட்டவர் அவர்.
பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி
நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளமிட்டு
இந்தியா படிப்படியாக
உயர்ந்திட வழிவகை செய்ததை
மறுக்க இயலாது.
சந்திரயான்
வெற்றி கூட
நேரு அவர்கள் வித்திட்டது தான்
என்றால்
அது மிகையில்லை.
அத்துடன் இஸ்ரோவின் விஞ்ஞானிகளின்
அயரா உழைப்பும்
கூரிய அறிவுத்திறனும் இந்தியாவை உலக அரங்கிலே
அண்ணாந்து பார்க்க வைத்திருக்கிறது.
ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றியும் பாராட்டுக்களும்!

12 ஆகஸ்ட், 2023

சாதிப் படி


நாங்குநேரியில் இடைநிலை சாதியைச் சேர்ந்த பள்ளிச் சிறுவர்கள் பட்டியலின மாணவன் வீட்டிற்குள் புகுந்து தாக்கிய நிகழ்வு

படியில் ரத்தம்

படித்தும் ஏன் இந்த குரூரம்

படிப்பில் என்ன குற்றம்


சாதிப் படியில் ஏறினால் 

இது தான் மிச்சம்

சாதி மிடுக்கைத் துக்கியெறிந்து விட்டு
சாதிக்கப் படியேறு


சாதிய ரத்தம் தோய்ந்த உன் கைகளைக் கழுவு

கறைகளோடு உன் குறைகளும் கரையட்டும்

கரையேறி வா
உனக்கான உலகம் விரிந்து கிடக்கின்றது


இது ஆயுதம் சுமக்கும் வயதல்ல;
இயற்கையைச் சுகிப்பதற்கானது

இது வசைபாடும் பருவமல்ல;
இசையோடு இழையோடும் காலம்
உன் பின்பக்கம் ஊசி போட்டால் கூட
கதறி அழும் பருவமிது;
உன் சகத் தோழனின்
உயிர் மாய்க்கும் வெறியை யாரிடமிருந்து கற்றாய்?

உனக்கான இலட்சிய வெளி
ஒளி மிகுத்து பரவிக் கிடக்க
நீயோ
சாதியம் எனும் மலத்தை
ஏகாந்தமாய் மிதித்துக் கடக்கிறாய்

உன் வீட்டுப் பெரியவர்கள் எல்லாம்
சாதித் தீயைச் சுமந்து சுமந்து
மனித இனத்தை எரித்துக் கறுக்கினர்

நீயோ அவர்களைப் பார்த்துப் பார்த்து
பெருமிதம் கொள்கிறாய்

இது பெருமிதம் அல்ல,
உன் நாவில்
நீயே தடவிக் கொண்ட நச்சு


அரசியல்வாதிகளுக்கெல்லாம்
நீ ஓட்டு வங்கி; அவ்வளவு தான்
நீ பிச்சை எடுத்தாலும்
அவர்களுக்கு ஓட்டுப் போட மட்டுமே நீ தேவை
அடுத்த ஐந்தாண்டுக்கோ
உன்னை சீண்டுவார் இல்லை


உன் மனிதத்தைக் கொலை செய்வதே
உன் சாதிய புத்தி
புத்தியை சரி செய் எல்லாம் சரியாகும்
இல்லையெனில்,
உன் சாதியமே உன்னை வீழ்த்தும்.
கூர் நோக்கு இல்லச் சிறைகளில் குறுக வைக்கும்.


உன்னையும்

உன் சாதியையும் உலகம் காரியுமிழும்.